அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மைத்ரேயன் வெளியேறியதால், அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவில் நினைத்துக்கூட பார்க்காத பல விசயங்கள் நடந்து முடிந்து உள்ளன. இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதாவது, ஜெயலலிதா இருந்த வரை, அவர் தான் அதிமுக வின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வந்தார். ஆனால், அவர் மறைந்த உடன் அந்த பதவியை பொதுக் குழு கூட்டி சசிகலாவுக்கு தாரை வார்த்தனர். அவரும் அந்த பதவியை ஏற்றுக் கொண்ட நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, அக்கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. எனினும், இவர்கள் இருவருக்கும் இடையே அதிகார போட்டி இன்றளவும் திரை மறைவில் நிலவி வருவது, அகட்சியினர் பலருக்கும் தெரிந்த உண்மையாகவே இருக்கிறத. 

அதே நேரத்தில், அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி அடைந்த பிறகு, “அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும்” என்ற முழக்கங்கள் அதிகரிக்கத் தொடங்கின. 

இதனால், “அதிமுக பொதுச் செயலாளராக யாரை தேர்வு செய்வது?” என்ற விவாதமும் அக்கட்சிகளும் திரைமறைவில் எழுந்தது. 

அந்த நேரத்தில் தான், “அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” என்று, தேனி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இந்த சூழ்நிலையில் தான், “வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதாக” அக்கட்சியினர் அறிவித்து உள்ளனர். 

அத்துடன், வரும் 23 ஆம் தேதி இந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில், அந்த கூட்டம் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் அதிமுக வின் அவை தலைவரை தேர்வு செய்யவது, பொதுக் குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

முக்கியமாக, இன்றைய கூட்டத்தில் பேசப்படும் முக்கிய தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க மாவட்டச் செயலாளர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. 

இப்படியான நிலையில் தான், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் மைத்ரேயன் வருகை தந்தார். 

அப்போது, அவரிடம் அங்கிருந்தவர்கள் “செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை” என்று கூறி உள்ளனர். இதனால், கடும் ஆவேசம் அடைந்த மைத்ரேயன், அந்த கூட்டத்தில் பங்கேற்காமலேயே வெளியே சென்று விட்டார். மைத்ரேயன் அந்த கூட்டத்தில் பங்கேற்காமலேயே வெளியேறிய நிகழ்வு, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, அண்மைக்காலமாக மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.  தெரிகிறது.