“முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் ஒற்றை தலைமை பற்றி பேட்டி கொடுத்ததால் தான், கட்சிக்குள் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது” என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

“அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற போட்டி, அக்கட்சிகுள் தற்போது அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக கடந்த 2 நாட்களாக போஸ்டர்கள் ஒட்டி அதன் மூலமாக மறைமுக யுத்தம் நடத்தி வருவது, அக்கட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது,  அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி அடைந்த பிறகு, “அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும்” என்ற முழக்கங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இதனால், “அதிமுக பொதுச் செயலாளராக யாரை தேர்வு செய்வது?” என்ற விவாதமும் அக்கட்சிகளும் திரைமறைவில் எழுந்தது. 

அந்த நேரத்தில் தான், “அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” என்று, தேனி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், அக்கட்சிக்குள் அப்போது முதல் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.  

இந்த சூழ்நிலையில் தான், “வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதாக” அக்கட்சியினர் அறிவித்த நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் நடக்கும் முன்பாக, அது குறிதது நேற்று முன் தினம் ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு விசயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும், தனித் தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனைகளை நடத்தினர்.

இதனால், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே தற்போது கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு தரப்பினரும் தனித்தனியாக கூடி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போட்டியை உறுதி செய்யும் விதமாக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் இரவோடு இரவாக தனித்தனியாக போஸ்டர் யுத்தம் நடத்தினர். அதன்படி, ஓபிஎஸ் ஆதரவு ஆட்கள் அதிமுகவில் மிக முக்கிய ஆதரவாளர்களை இழுக்கும் விதமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தனர். 

அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள், இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். 

இதனையடுத்து, அதிமுக தலைமையகத்திற்கு நேற்று வருகை தந்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன் தொடர்ச்சியாக, அவரது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்ற  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், அங்கிருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய ஓபிஎஸ், “இது தொண்டர்களுக்கான இயக்கம், பொது குழுவில் பல்வேறு திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வர முடியும். ஆனால், அதிமுகவில் பொது செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே அது அவருக்கே உரித்தானது” என்று, சுட்டிக்காட்டி பேசினார்.

அத்துடன், “30 ஆண்டுகள் பொது செயலாளர் பதவி வகித்தார் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் பொதுச் செயலாளர் பதவி அவருக்கு மட்டுமெ உரியது என்று நானும், எடப்பாடியும் முடிவு செய்தோம் என்றும், டிடிவி செயல் பாடுகளால் ஆட்சி பறி போக கூடிய சூழல் உருவானபோது, ஆட்சி பறி போக கூடாது என நானும் எடப்பாடி பழனிசாமியும், அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று, நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்தோம்” என்றும், குறிப்பிட்டார்.

மேலும், “கடந்த 6 ஆண்டுகாலமாக நானும் எடப்பாடி பழனிசாமியும், எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறோம் என்றும், துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று எனக்கு தெரியும்,  இருந்தாலும் கட்சி நன்மைக்காக பிரதமர் கேட்டு கொண்டதால், நான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

குறிப்பாக “மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து செல்வதற்காக மாதவரம் மூர்த்தி எடப்பாடி பழனிசாமி தான் அழைத்து வந்தார். அவர் தான் முதன் முதலில் ஒற்றை தலைமை என ஆரம்பித்தார்” என்று, சுட்டிக்காட்டிய ஓபிஎஸ்,  “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை பற்றி பேட்டி கொடுத்ததால் தான், ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது” என்றும், ஓபனாகவே பேசினார்.

முக்கியமாக, “ஒற்றைத் தலைமை பிரச்சினையை பேட்டி அளித்து பெரிதாக்கியவர்களை நானும், எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்து பேசி கண்டிக்க வேண்டும்” என்றும்,  ஓபிஎஸ் அப்போது வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

மிக முக்கியமாக, “அதிமுகவில் குழப்பத்திற்கு காரணமான ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “பொருத்திருந்து பாருங்கள் தெரியும்” என்றும், ஓபிஎஸ் சூசகமாக பதில் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “நான் தொண்டர்களை காப்பாற்றவே இந்த இயக்கத்தில் இருக்கிறேன் என்றும், நாம் ஒற்றுமையாக பணியாற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் இதுவே நமது தலையாய கடமை என்றும், அதைவிடுத்து இது போன்ற பிரச்சினைகளில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம்” என்றும், தெளிவுப்பட பேசினார். 

குறிப்பாக, “அதிமுகவிற்கு இரட்டை தலைமை சரியானதா இல்லையா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஓபிஎஸ்,  “இன்றைய கால கட்டத்தில் இரட்டை தலைமை நன்றாக செல்கிறது” என்றும், வெளிப்படையாகவே பதில் அளித்தார்.

இதனிடையே, சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், தனது ஆதரவாளர்களுடன் 4 வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.