மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன், மனைவியின் தலையை வெட்டி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே காவல் நிலையம் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 

பண்டா மாவட்டத்தில் உள்ள நெத்த நகர் கிராமத்தைச் சேர்ந்த சின்னார் யாதவ் என்பவர், அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு 35 வயதில் விம்லா என்ற மனைவி இருந்தார்.

இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், சந்தேகம் என்னும் புயல் கூலித் தொழிலாளி சின்னார் யாதவின் வாழ்க்கையில் புயலாக வந்து வீசியது.

மனைவியின் செயல்பாடுகளில் சின்ன மாற்றத்தை உணர்ந்த கணவன் சின்னார் யாதவ், கடந்த சில தினங்களாக மனைவி விம்லாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து உள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சின்னார் யாதவ், அடுத்து என்ன செய்வது என்று யோசித்து உள்ளார்.

இதனையடுத்து, தன் மனைவியிடம் அவர் அடிக்கடி சண்டை போட்டதாகத் தெரிகிறது. அத்துடன், “இனிமேல் சும்மா சும்மா வெளியே எல்லாம் செல்லக் கூடாது என்றும், ஊரில் யாருடனும் பேசக் கூடாது” என்றும், தன் மனைவியை அவர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாகக் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், போக போக மனைவி மீதான சந்தேகம் அவருக்குத் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில், கணவன் - மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த சண்டையில் கடும் ஆத்திரமடைந்த கணவன் சின்னார் யாதவ், வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதங்களால் தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த விம்லா, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால், மனைவி உயிரிழந்த பின்பும், அவர் மீது இருந்த கோபம் தீராத நிலையில், அந்த கோபம் வெறியாக தலைக்க ஏறி, கொடூரத்தின் உச்சமாக, உயிரிழந்த மனைவி விம்லாவின் தலையை வெட்டி, கையில் எடுத்துக்கொண்டு அங்குள்ள பாபெரு காவல் நிலையத்தை நோக்கி ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தொலைக்கு நடந்து சென்று உள்ளார்.

ஆனால், அந்த வழியாகா ரோட்டில் மனைவியின் தலையுடன் அவர் நடந்து சென்றதைப் பார்த்த அப்பகுதி மக்கள், கடும் பீதி அடைந்து, அப்பகுதியில் உள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால், அந்த நபர் காவல் நிலையம் சென்று சேர்வதற்குள், விரைந்து வந்த போலீசார், அந்த நபரை வழி மறித்து, அவரிடமிருந்த தலையைக் கைப்பற்றி அவரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அந்த நபரின் வீட்டிற்குச் சென்று, உயிரிழந்து சடலமாகக் கிடந்த விம்லாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது தொடர்பாகக் கொலை செய்த கணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக மனைவியிடம் பல முறை கேட்டும் அவர் சரியாகப் பதில் சொல்ல வில்லை. இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை 

வந்துகொண்டே இருந்தது. இதனால், கோபத்தில் மனைவியின் தலையைத் தலையை வெட்டி எடுத்து வந்துள்ளேன்” என்று, அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் மீது பல பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மனைவியின் தலையை வெட்டி கையோடு எடுத்துக்கொண்டு சாலையில் அந்த நபர் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.