டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டிக்டாக் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக ஜி.பி முத்துவை தெரியாமல் நிச்சயமாக இருக்க முடியாது. அந்த அளவுக்கு டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி முத்து.

டிக்டாக்கில் செயலியில், தனது ஏரியா வட்டார மொழியில் பேசுவதும், அதுவும் எதிர் மறையான கருத்துக்களைக் கூறியுமே டிக்டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இந்த ஜி.பி முத்து.

ஜி.பி முத்து, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். அவர் இதற்கு முன்பு செய்த மரக்கடை வேலையை விட்டு விட்ட, டிக்டாக்கில் வீடியோ செய்வதையே, அதுவும் ஊர் ஊராகச் சென்று வீடியோ செய்வதையே தன்னுடைய முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டார். இதனால், ஜி.பி முத்து குடும்பத்தில் பிரச்சனை பூதாகாரமாக வெடித்ததாகவும் கூறப்பட்டது.

அத்துடன், “என்னை “டிக்டாக் பைத்தியம்” என்று தனது மகள், மனைவி உட்பட பலரும் விமர்சிப்பதாக” அவரே வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, கடைசியாக டிக்டாக் செயலியை தடை செய்வதற்கு முன்பாக, ஜி.பி முத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தனது மகளை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்து, அதில் ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினரை வசை பாடியிருந்தார். 

இந்த வீடியோ பரவிய நிலையில், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த வினோ என்பவர், முதலமைச்சரின் தனி பிரிவுக்கு ஜி.பி முத்து பற்றி புகார் மனு அனுப்பி வைத்திருந்தார். இதன் காரணமாக, குலசேகரப்பட்டினம் போலீசார் ஜி.பி முத்துவை தேடிச் சென்ற நிலையில், அவர் மரக்கடையில் அமர்ந்து டிக்டாக் வீடியோ ஒன்று செய்துகொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று வசமாகக் கவனித்துள்ளனர்.

அப்போது, அவரிடம் நடத்திய விசாரணையில், “எந்தவித உள் நோக்கமும் இன்றி, தான் அப்படி பேசிவிட்டதாகவும், இனிமேல் எந்த வீடியோவும் டிக்டாக்கில் நான் பதிவேற்ற மாட்டேன்” என்றும் அவர் எழுதிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து, ஜி.பி. முத்துவின் குடும்பச் சூழல் கருதி, போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். 

அதன் தொடர்ச்சியாக, “டிக்டாக்கை விட்டே நான் செல்கிறேன்” என்று, ஜி.பி.முத்து கூறியதாகவும் செய்திகள் வெளியானது. அத்துடன், டிக்டாக் செயலி தடை செய்யும் போது, ஜி.பி.முத்து கொந்தளித்து வசனங்கள் எல்லாம் பேசினார். தற்போது, இந்தியாவில் டிக்டாக் செயலி முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார் ஜி.பி.முத்து.

கொரோனா ஊரடங்கு பற்றியெல்லாம் கவலைப்படாத அவர், டிக்டாக் தடையால் மிகவும் மனம் உடைந்த உள்ளதாகவும், இதனால் மீண்டும் டிக்டாக் செயலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அவர் பிரதமர் மோடிக்கு எல்லாம் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

மேலும், டிக்டாக் தடை காரணமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், அதில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

குறிப்பாக, சமீபத்தில் வெளியிட்டுள்ள கடைசி வீடியோ ஒன்றில், “எனது குடும்ப பிரச்சனை காரணமாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை” என்று, மிகவும் வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில், அவர் வீடியோ வெளியிட்ட அடுத்த நில மணி நேரங்களிலேயே அவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக” போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.