மென்பொருள் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் மைக்ரோசாஃப்ட், தனது ஊழியர்களில் விருப்பம் இருப்பவர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக அமெரிக்க ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. தற்போது கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பெரும்பான்மையான ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் விரும்பினால், நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பேரிடர் காரணமாக, மைக்ரோசாஃப்டின் பெரும்பாலான ஊழியர்கள் தற்போதும் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் அலுவலகத்தை அடுத்த ஆண்டு ஜனவரி வரையிலோ அல்லது அதற்கு முன்போ திறப்பதற்கான எந்த திட்டமும் மைக்ரோசாஃப்ட் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு திறக்கும்போது, ஊழியர்கள் விரும்பினால், நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கலாம் என்ற முடிவையும் மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் தரப்பில் இது குறித்து கூறுகையில், ``கொரோனா பேரிடர் நமது சிந்தனை, வாழ்க்கை முறை, வேலை என அனைத்தையும் மாற்றிவிட்டது. எனவே, ஊழியர்களின் வசதிக்கேற்ப பணியாற்றும் சூழலை வடிவமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், உலகின் முன்னணி நிறுவனங்கள் பல இதுபோன்று தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தொழில் நடவடிக்கைகள் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கின. இக்காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்க அனுமதித்தன. இது தொழிலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்பட்டது. நிறுவனங்களுக்கும் அலுவலக வாடகை, மின் கட்டணம், உள்ளிட்ட செலவுகள் குறைவதால் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறையைப் பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன.

ஆனால், வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை விட அலுவலகத்துக்குச் சென்று வேலைபார்ப்பதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர் என சில ஆய்வுகள் சொல்கின்றன. காரணம், எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வேலை பார்ப்பது, முழு மனதுடன் முழு வீச்சுடன் வேலைபார்ப்பது போன்றவை அலுவலகச் சூழலிலேயே தொழிலாளர்களுக்கு ஏதுவாக இருக்கின்றன. அவரவர் வீடுகளில் தனித்தனியே வேலைபார்ப்பதால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் இடைவெளி இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் பணியாளர்களில் ஐந்தில் ஒருவர் தனிமையை உணருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

linkedin சார்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 16,000 இந்திய புரொபசெனல் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீதத்தினர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதில் தனிமையில் வாடுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 41 சதவீதத்தினர் இந்த நடைமுறையால் தங்களது திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் வேலை - குடும்பம் ஆகிய இரண்டும் ஒன்றாகப் பிணைவதால் பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுவதாக 46 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அதேபோல, இந்த நடைமுறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக 39 சதவீதத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.