பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி - சஞ்சனா இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, மோதிக்கொண்டதால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போதைப் பொருள்கள் பயன்படுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பெங்களூரைச் சேர்ந்த நடிகை ராகினி திவேதி, சஞ்சனா ஆகிய இருவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் அடுத்தடுத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் நடிகைகள் இருவரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அங்கிருந்த படியே நடிகைகள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படி நடைபெற்று வரும் விசாரணையில், நடிகைகள் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அத்துடன், சட்ட விரோதமாகச் சொத்து சேர்த்தது குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிறைக்குச் சென்று நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம் 5 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி பலவிதமான தகவல்களையும் பெற்றனர். 

இந்நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நடிகைகள் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, மோதிக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் நடிகைகள் ராகிணி - சஞ்சனா இருவரும் அடைக்கப்பட்டு உள்ளனர். அங்கு, நடிகை ராகிணி காலை முதல் மாலை வரை சக கைதிகளுடன் பேசிக்கொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இரவு நேரங்களில் சிறையில் இருந்தபடியே அவர் புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

முக்கியமாக, நள்ளிரவு நேரம் வரை ராகிணி புத்தகம் படிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த அறையில் நள்ளிரவு நேரம் வரை லைட் எரிவது வழக்கம். இதன் காரணமாக, அதே அறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை சஞ்சனாவால் இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை. இதனால், தூக்கம் இன்றி அவர் அவதியடைந்து உள்ளார்.

சில நாட்கள் பொறுத்துப் பொறுத்து பார்த்த நடிகை சஞ்சனாவால், ஓரளவுக்கு மேல் இரவு நேரத்தில் கண் விழிக்க முடியாமல்,அறையில் உள்ள லைட்டை அணைக்கும் படி  நடிகை ராகிணியிடம் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகைகள் இருவருக்குள்ளும் கடந்த சில நாட்களாக வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நடிகை சஞ்சனா அதிகாலையில் எழுந்து அறையில் மின் விளக்கை எரிய விட்டபடி யோகா உள்ளிட்ட உடற் பயிற்சிகளைச் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலையில் தூங்க விடாமல் சஞ்சனா யோகா பயிற்சி செய்வதாக, நடிகை ராகிணி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, நடிகைகள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம்சாட்டிய நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்குமான வாக்குவாதம் முற்றவே, 2 நடிகைகளும் தினமும் மோதிக் கொள்வதாகவும், அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.