நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதிகரிக்கும் கொரோனா தொற்று குறித்து, பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறர்.

இந்தியா முழுமைக்கும் கொரோனாவின் 2 வது அலை அதி வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான புதிய நோயாளிகளும், ஆயிரக்கணக்கான உயிர் பலிகளும் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. 

அதன் படி, இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். அதே போல், கொரோனா பாதித்த 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

இப்படியாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாமல், மருத்துவமனைகள் முற்றிலுமாக திணறி வருகின்றன. இதனால், இந்தியா இதுவரை வரலாறு கண்டிராத ஒரு துயரமான கட்டத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அத்தகைய நிலையை தான், இந்தியா தற்போது கடந்துகொண்டு இருக்கிறது.

இப்படியான இக்காட்டான சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநிலங்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் பிரதமர் கூறி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா கட்டுப்படுத்த அடுத்த கட்ட முயற்சியாக இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில், கொரோனாவால் நாடு சந்தித்து வரும் மிக மோசமான சூழல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று, கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை வீசத் தொடங்கிய பிறகு, மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதலாவது ஆலோசனை கூட்டம் இது என்பதால், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

முன்னதாக, ராணுவ தளபதி நரவனேயுடன், பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு ராணுவம் 

மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் தயார் நிலைகள் குறித்து கேட்டறிந்த மோடி, அவற்றை அப்போது ஆய்வு செய்தார்.

அப்போது, ராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நரவனே, பிரதமர் மோடிக்கு விளக்கமாக எடுத்துக்கூறினார். 

மேலும், இந்தியா முழுவதும் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தற்காலிக மருத்துவமனைகளை ராணுவம் அமைத்து வருவதாகவும், மக்கள் தங்கள் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கு நாடலாம் என்றும், பிரதமருக்கு நரவனே எடுத்துக் கூறினார்.

இன்று காலை 11 மணி அளவில் நடக்கும் இந்த ஆலோசனையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வேறு என்ன நடவடிக்கைகளை எல்லாம் எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, “இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது” என்று, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.