“தமிழகத்தில் திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றும்” என்று, இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் தான், தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.

அதே போல், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது முழுவதுமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 5 மாநில வாக்கு எண்ணிக்கையும் மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர், ரிபப்ளிக் சி.என்.எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தற்போது ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகின்றன.

இதில், “தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள்?” என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் இன்றைய சூழலில், பல செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், திமுக கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. 

அதன் படி, எபிபி நியூஸ் - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், “திமுக கூட்டணி 170 தொகுதிகள் வரை வெற்றி பெறும்” என்று கூறியுள்ளது.

அத்துடன், “அதிமுக கூட்டணி 58 - 70 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்றும், கணிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, “அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தில், இந்த முறை திமுக கூட்டணி அதிக தொகுதிகளைப் பெறும்” என்று ஏ.பி.பி கணித்து கூறியுள்ளது. 

“அந்த பகுதியில் மொத்தம் உள்ள 52 தொகுதிகளில் 33 - 35 தொகுதிகளை திமுக கைப்பற்றும்” என்றும், கணிக்கப்பட்டு உள்ளது. 

இதனால், அந்த பகுதிகளில் அதிமுக கூட்டணி 15 - 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்” என்றும், கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, குறிப்பிட்ட இந்த கொங்கு தொகுதிகளில் மட்டும் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் 24 தொகுதிகள் வரை, அதிமுக இந்த முறை இழக்க உள்ளதாகவும், எபிபி நியூஸ் - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பில், “அதிமுக கூட்டணி 56 - 58 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், “திமுக கூட்டணி 160 - 170 இடங்களிலும், மற்ற கட்சிகள் 6 தொகுதிகள் வரை வெற்றி பெறும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில்..

திமுக கூட்டணி  175 - 195
அதிமுக கூட்டணி  38 - 54
அமமுக கூட்டணி 1 - 2
மநீம கூட்டணி 0 - 2
பிற கட்சிகள் - 0
என்ற அளவில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என்று, கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.