ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கும் வழக்கில் ஆஜரான நீதிபதி, உளவியல் கலந்தாய்வுக்கு செல்ல முடிவு செய்துள்ள சம்பவம் பேசும் பொருளாக மாறி உள்ளது.

தமிழ்நாட்டில் மதுரையில் தான் இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவர், ஓரினச்சேர்க்கை தொடர்பினால் தங்களது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த இரு பெண்களின் பெற்றோர்களும் மதுரையில் பெரும் தொழிலதிபர்களாக இருப்பதால், அவர்கள் தங்களது மகளை மீட்டுத் தரக்கோரித் தனித் தனியாக 
மதுரை மாவட்டத்தில் உள்ள இரு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இரு பெண்களையும் பிடிக்க தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த தகவலை தெரிந்துகொண்ட அந்த ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிகள், “எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு பெண்களும் சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரினைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இளம் பெண்கள் இருவருக்கும், அவர்களது 
பெற்றோருக்கும் உளவியல் ரீதியான கலந்தாய்வு வழங்க அதிரடியாக உத்தரவிட்டார். 

அத்துடன், நீதிமன்ற உத்தரவுப் படி, உளவியல் நிபுணரான வித்யா தினகரன் என்பவர், இருதரப்புக்கும் முறையாக கவுன்சிலிங் வழங்கினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உளவியல் நிபுணர் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், “இளம் பெண்கள் இருவரும் தங்களிடையே உள்ள உறவு முறையை நன்றாகப் புரிந்துவைத்து உள்ளனர் என்றும், பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் 
தீவிரமாகக் காதலித்து வருகின்றனர்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், “பெற்றோர் தங்களது உறவைப் புரிந்துகொண்டு தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்றெல்லாம் அந்த இரு பெண்களும் விரும்புகின்றனர்” என்றும், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

“ஆனால், இந்த இரு பெண்களின் உறவால் அவர்களது பெற்றோர் கடுமையான மன வேதனையில் உள்ளனர் என்றும், சமூகமும், சமுதாயமும் தங்களை கேவலமாகப் பார்க்குமே என்று அவர்கள் வேதனைப்படுகின்றனர்” என்றும், அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இதே போல், “ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்வதற்குப் பதில், தங்களது மகள்கள் பிரம்மச்சாரிகளாக மாறியிருக்கலாமே” என்று அவர்கள் பதில் கூறுகிறார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

அதே நேரத்தில், “மகள்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களது பெற்றோர்கள் பயப்படுகின்றனர்” என்றும், உளவியல் நிபுணரான வித்யா தினகரன் அறிக்கை அளித்தார்.

இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் “உயர்நீதிமன்ற தலையிட்ட பின்னர், போலீசார் எந்த தொந்தரவும் செய்யவில்லை என்றும், அதே நேரம் ஓரினச்சேர்க்கை ஜோடியை சமுதாயத்தில் கவுரவமாக நடத்தும் விதமாகத் தகுந்த விதிமுறைகளை இந்த நீதிமன்றம் உருவாக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, “எந்த ஒரு பரிணாம வளர்ச்சியும் ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது என்றும், இந்த இளம் பெண்கள் இருவருக்கும், அவர்களது பெற்றோருக்கும் வருகிற மே மாதம் மீண்டும் உளவியல் கலந்தாய்வு வழங்க உளவியல் நிபுணருக்கு உத்தரவிடுகிறேன்” என்றும், கூறினார்.

“ஓரினச்சேர்க்கை ஜோடிக்கான தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றால், முதலில் எனக்கு விழிப்புணர்வு தேவை என்று குறிப்பிட்ட நீதிபதி, ஆகவே, நானும் இந்த விவகாரம் குறித்து உளவியல் ரீதியான கலந்தாய்வுக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றும், வெளிப்படையாகவே தெரிவித்தார்.

“இதன் மூலமாக, ஓரினச்சேர்க்கை ஜோடியின் நிலை குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியும் என்றும், விதிமுறைகளை உருவாக்கித் தீர்ப்பு வழங்க கலந்தாய்வு உதவும் என்று நான் நம்புகிறேன் என்றும், அதனால் எனக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்று உளவியல் நிபுணர் வித்யா தினகரனை கேட்டுக்கொள்கிறேன்” என்றும், நீதிபதி அறிவுறுத்தினார். பின்னர், இந்த வழக்கை ஜூன் 7 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.