கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரை உ.பி காவல்துறை, மருத்துவமனை கட்டிலில் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் செய்தி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லியில் உள்ள மலையாள செய்தி இணையதளத்தில்  செய்தியாளராக பணிபுரிந்து வந்த சித்திக் காப்பான், கடந்த 2020ம் ஆண்டும் அக்டோபர் 5ம் தேதி உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் செய்தி பதிவு செய்வதற்காக அங்குச் சென்றுள்ளார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த உ.பி காவல்துறையினர், பொது அமைத்திக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, அவரை கைது செய்துள்ளனர். 


சித்திக்குடன் செய்தி சேகரிக்க சக ஊழியர்கள் ஆலம், மசூத் அகமது, அதிர் உர் ரஹ்மான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திர பிரதேசத்தில் ஒரு பெரிய சதி திட்டத்தை செயல்படுத்தவே சித்திக் அங்கு சென்றதாகக் கூறி, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து , சட்டவிரோத  செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சித்திக் காப்பான் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஏப்ரல் 21-ம் தேதி மதுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சித்திக் காப்பானின் மனைவி ரைஹானா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 அந்த கடிதத்தில், ” சித்திக் கடந்த 10 நாட்களாக காய்ச்சலில் இருக்கிறார். குளியலறையில் வழுக்கி விழுந்ததாகக் கூறி அவரின் தாடையில் காயம் ஏற்பட்டு உள்ளது.

சிறையிலிருந்தாலாவது அவர் சிறுநீர் கழிக்கவாவதுக் கூடும் ஆனால் மருத்துவமனையில் அதற்கு கூட உரிமை மறுக்கப்படுகிறது. உ.பி காவல்துறையினர், எனது கணவரை மருத்துவமனைக் கட்டிலில் ஒரு மிருகத்தைப் போல் கட்டி வைத்துள்ளனர்.

கடந்த 4 நாட்களாக உணவருந்தவோ கழிப்பறைக்குச் செல்லவோ இயலாத நிலையில் கட்டிவைத்து கொடுமை செய்கிறார்கள்.  விரைவில் உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டுச் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சித்திக் உயிரிழக்கக்கூடும்” என்று அச்சம் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன்,  உ.பி முதல்வர் யோகி ஆத்திய நாத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ‘’ பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிற ஊடகத்துறையினரும் எனது கவனத்திற்கு எடுத்து வந்தனர். 


மதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சித்திக் உடல்நிலை மிகவும்  மோசமாக உள்ளது. இந்நிலையில் படுக்கையில் சங்கிலியால் கட்சி வைத்துள்ள சித்திக் காப்பானை அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.