தனது மகளின் திருமண செலவுகளுக்காகச் சேமித்து வைத்திருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக நன்கொடை வழங்கியுள்ளார்  சம்பலால் குர்ஜார் என்ற விவசாயி.


மத்தியப்பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்பலால் குர்ஜார். விவசாயம் செய்து வரும் இவருக்கு அனிதா என்ற மகள் இருக்கிறாள்.

அனிதாவின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த  2 லட்ச ரூபாய் பணத்தை, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டருக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.


அந்த 2 லட்சம் காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். அந்த 2 லட்சம் பணத்தை வைத்து அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


” எனது மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த 2 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நன்றாக நடைபெற்றது.

சேமித்து வைத்திருந்த பணத்தை  
என் மகளின் திருமண நினைவாக இப்போது மாவட்ட ஆட்சியரிடம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக நன்கொடையாகக் கொடுத்து இருக்கிறேன். 
இந்த பேரிடர் காலத்தில் மக்கள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவித்து வருகிறார்கள்.

எனது மகளின் திருமணத்துக்கு செலவு செய்வதைக் காட்டில் என்னால் முடிந்த அளவுக்கு கொரோனா நோயாளிகளுக்கு உதவுவது நிறைவாக இருக்கிறது.” என்று கூறுகிறார்  சம்பலால் குர்ஜார். விவசாயி  சம்பலால் குர்ஜாரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.