“அக்டோபர் 2 ஆம் தேதி வரை போராட்டம் தொடரும்” என்று, விவசாய அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளன. 

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள், கடந்த நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இது வரை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தியும், இது வரை எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படவிட வில்லை. எனினும், டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

இதனையடுத்து, போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் மாலை 3 மணி வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் “சக்கா ஜாம்” என்கிற பெயரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, நாடு முழுவதும் விவசாயிகளின் “சக்கா ஜாம்” போராட்டக் குரல், ஓங்கி ஒலித்தது. 

விவசாயிகளின் போராட்டத்தை யொட்டி நேற்றைய தினம் டெல்லி எல்லையான சிங்கு, காஜிபூர், டிக்ரி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் இணைய சேவையும் முற்றிலுமாக முடக்கப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அமைப்புகள், “அரசுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார்” என்று, குறிப்பிட்டனர். 

“வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது என்றும், அவற்றை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்” என்றும்,  விவசாயிகள் வலியுறுத்தினர்.

“தங்களது கோரிக்கையில் சமரசம் செய்ய முடியாது என்றும், காந்தி ஜெயந்தியான வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும்”  விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் தெரிவித்தார். 

குறிப்பாக, “அக்டோபர் 2 ஆம் தேதிக்குப் பிறகு, நாங்கள் மேலும் திட்டமிடல் செய்வோம் என்றும், அரசாங்கம் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார். 

மேலும், பேசிய சில விவசாயிகள், “சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் அனைவரும் வீடு திரும்ப மாட்டோம்“ என்றும், கர்ஜித்தனர். 

இதனால், விவசாயிகள் தான் கடவுள் என்று சொல்லும் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும், அந்த கடவுளின் உருவமாக இருக்கும் அப்பாவி விவசாயிகளுக்காகத் துளியும் இறங்கி வராமல், தங்களது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பது நாட்டில் உள்ள ஒட்டு மொத்த விவசாயிகள் மத்தியிலும் கவலைகொள்ளச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.