மது குடிப்பதில் இந்தியாவிலேயே எந்த மாநில பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் நோயால் இந்தியாவே ஒரு இக்கட்டான நிலையில் இருந்தாலும் கூட, மது குடிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் துளியும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த பட்டியலில் இந்தியப் பெண்களும் இடம் பிடித்து உள்ளது தான் வருத்தமான ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது.

அதாவது, இந்தியாவில் பெண்களும் மதுப்பழக்கம் மற்றும் போதை வஸ்துக்களை அதிகமாக உபயோகித்து வருவது தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் அதிகமாக மது குடிக்கும் பெண்கள் உள்ள மாநிலங்கள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தற்போது வெளியிட்டுள்ளது.

“இதில் கடந்த 2019 - 20 ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிக பட்சமாக அசாம் மாநிலத்தில் 26.3 சதவீதம் பெண்கள் மது அருந்துவது” ஆய்வறிக்கையின் படி  தெரிய வந்து உள்ளது. 

இதில், “அதிக பட்சமாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களே மது அருந்துகின்றனர்” என்றும், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“ஆனால், மற்ற மாநிலங்கள் அனைத்திலும் மது குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்குக் கீழ் உள்ளது” என்றும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “கடந்த 2005 - 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், அங்கு மது குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 7.5 சதவீதமாக மட்டுமே இருந்தது. 

அப்போது, அருணாச்சலப் பிரதேசத்தில் 33  சதவீத பெண்களும் சிக்கீமில் 19  சதவீத பெண்களும், சட்டீஸ்கரில் 11.4 சதவீத பெண்களும் மது பானங்களை குடித்து வந்ததாக” தெரிவிக்கப்பட்டது.

“ஆனால், தற்போது இந்த மாநிலங்கள் அனைத்திலும் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் கடந்த 14 வருடங்களில் இல்லாத வகையில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 26.3 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதே போல், தேசிய அளவில் ஒப்பிடும் போது, அருணாச்சல் பிரதேசத்தில் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள 35.6 சதவீத ஆண்கள் மது பானங்களை குடித்து வருகின்றனர்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, இந்தியா மாதிரியான வெப்ப மண்டல நாடுகளில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலைக்குரியது ஆகும். 

குறிப்பாக, “இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மது என்பது மனித ஆற்றலை வீணடித்து, தேசத்தின் வளர்ச்சியைத் தடைப்படச் செய்யும் என்பதை மக்கள் தான் உணர வேண்டும்” என்றும், சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

இந்தியாவில் அதிகமாக மது குடிக்கும் பெண்கள் பற்றிய புள்ளி விபரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே போல், “கொரோனா காலத்தில் நாடு முழுவதும் 13,244 பாலியல் பலாத்கார புகார்கள் பதிவாகி உள்ளதாக” மத்திய அரசு கடந்த மாதம் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து இருந்தது. 

மேலும், “கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை, இந்தியக் குழந்தைகள் தொண்டு அமைப்புக்குக் குழந்தைகள் பாலியல் வழக்குகள் தொடர்புடைய 3,941 தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதாக” மத்திய அரசு கடந்த மாதம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.