“இந்தியா தாக்குதல் நடத்தும் என்பதால் நடுங்கிப்போன பாகிஸ்தான் ராணுவ தளபதி அபிநந்தனை விடுவித்தார்” என்று, அந்நாட்டின் எம்.பி. ஒருவர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தைத் துரத்திச் சென்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் எல்லையில் துரதிருஷ்டவசமாக விழுந்தார். அதில் இருந்த அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்தனர். 

அப்போது, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு வீரமாகவும், விவேகமாகவும் அபிநந்தன் பதில் அளித்தார். இதனை அந்நாட்டு ராணுவத்தினர் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. இதனை அடுத்து, இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் விடுவித்தது. இதனையடுத்து, அபிநந்தனின் வீரம் நாடு முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், “இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, பாகிஸ்தான் விடுவிக்கவில்லை என்றால், அன்று இரவு 9 மணிக்குள் இந்திய ராணுவம், பாகிஸ்தானைத் தாக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி பேசினார்” என்று, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர் அயாஸ் சாதிக் தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த நிகழ்வை விவரித்துப் பேசிய அயாஸ் சாதிக், “பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நாடாளுமன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி, இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சனை தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் இம்ரான் கான் கலந்து கொள்ள மறுத்து விட்டார். இதனால், மஹ்மூத் குரேஷி கலந்து கொண்டார்” என்றும், குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “இந்த கூட்டத்தில் ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வா அறைக்குள் வந்தார். அப்போது, அவரது கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்த்து கொண்டிருந்தது. கடவுளின் பொருட்டு அபிநந்தனை செல்ல விடுங்கள். இல்லையெனில் இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தானைத் தாக்கும்” என்று தெரிவித்தார். 

“அபிநந்தன் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் எதிர்க் கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் அரசை தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறது. ஆனால், இனி மேலும் ஆதரிக்க முடியாது” என்றும் சாதிக் கூறினார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர் அயாஸ் சாதிக்கின் இந்த பேச்சு, இந்தியா - பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில், இந்த கருத்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.