இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆப் சுற்றில் முதல் இடத்தைத் தவிர, மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போடுவதால், இனி வரும் போட்டிகள் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளன.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர், பிளே ஆப் சுற்றை நெருங்கி வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது.

அதே நேரத்தில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றை உறுதி செய்து உள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரை, இது வரை 12 போட்டிகளில் விளையாடி இதில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அத்துடன், மும்பை அணி ரன்ரேட்டில் +1.186 ஆக உறுதியாக இருக்கிறது. இதனால், மும்பை அணியின் பிளே ஆப் இடத்துக்கு இனி ஒரு ஆபத்தும் இல்லை. இதனால், மும்பை அணி, இன்னும் மீத உள்ள டெல்லி மற்றும் ஐதராபாத்துக்கு எதிரான 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் டாப் 2 இடத்துக்குள் வந்து விடும். தற்போது மும்பை அணி, பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தில் நீடிப்பதால், மீத உள்ள 3 பிளே ஆப் சுற்று இடத்துக்கு, சென்னை அணியைத் தவிர, 6 அணிகள் வரிசை கட்டி, வரிந்துகட்டுகின்றன. இதனால், மீதமுள்ள கடைசி கட்ட போட்டிகளின் முடிவுகள் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், தற்போது 14 புள்ளிகளுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 வது இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு அணிக்கு ஐதராபாத் மற்றும் டெல்லி அணிக்கு எதிராக இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. இவற்றில் கட்டாயம் ஒன்றில் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் அந்த அணி இருக்கிறது. 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட தற்போது உள்ள அதே 2 வது இடத்தில் இந்த அணி தொடரும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைப் பொறுத்த வரை இது வரை 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3 இடத்தில் உள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக இந்த அணி தோல்வி அடைந்ததால், இப்போது அந்த அணிக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டு உள்ளது. டெல்லி அணி இன்னும் மும்பை மற்றும் பெங்களூருக்கு எதிராக கடைசி 2 போட்டிகளில் விளையாடி வெற்றிப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றால் தான், பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பொறுத்த வரை, இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிப் பெற்று 12 புள்ளிகளுடன், பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி மீதமுள்ள 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினால் கூட மற்ற அணிகளின் சாதகமான முடிவுக்காக இந்த அணி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிப் பெற்று 12 புள்ளிகளுடன், பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி ரன்ரேட்டில் -0.479 பின் தங்கியுள்ளது. இதனால், கடைசி 2 போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தானுக்கு எதிராகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில், ஒன்றில் தோற்றால் கூட, இந்த அணிக்கான வாய்ப்பு மங்கி விடும். குறிப்பாக, இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணி, கொல்கத்தாவுடன் மோதுகிறது. இன்றைய போட்டியில், சென்னை அணி ஆறுதல் வெற்றி பெருமா என்று, ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை பொறுத்த வரை, 12 போட்டிகளில் விளையாடி 5 ல் வெற்றி, 7 ல் தோல்வி என்று, 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளன. ஐதராபாத் அணி கடைசி 2 போட்டிகளில் பெங்களூரு மற்றும் மும்பைக்கு எதிராக மோத உள்ளன. இதில், 2 போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற வேண்டும். அதே சமயம், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் கடைசிக் கட்ட ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்போது தான் ஐதராபாத் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கும். முக்கியமாக, டெல்லி அணி எஞ்சி உள்ள 2 லீக்கிலும் தோற்றால், அது ஐதராபாத்துக்கு இன்னும் ஜாதகமாக அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளன. ராஜஸ்தான் அணி கடைசி 2 லீக்கில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். ஆனால், ராஜஸ்தானின் ரன்ரேட் -0.505 என்று, மிக மோசமாக இருப்பதால், கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் தங்களது இறுதி கட்ட போட்டிகளில் தோல்வியைத் தழுவினால் மட்டுமே ராஜஸ்தான் அணி பிளே ஆப் வாய்ப்பை பெற முடியும். இதன் காரணமாக, இனி வரும் போட்டிகள் யாவும் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் மட்டுமே பெற்று பட்டியலில் கடைசி இடமான 8 வது இடத்தில் உள்ளது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறுகிறது. அத்துடன், ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.