சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நேற்று (அக்டோபர் 26) பேசினார். 

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். 

இந்த ஈரடுக்கு (டபுள் டெக்கர்) மேம்பாலம் அமைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த ஈரடுக்கு மேம்பாலம் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னைக்கு வந்திருந்த நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழகத்தில் நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகளின் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். மேம்பாலத்தை ஈரடுக்கு வடிவமைப்பில் கட்டமைக்க சர்வதேச நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமியிடம் நிதின் கட்கரி தெரிவித்தார். ஈரடுக்கு மேம்பாலம் கட்டமைத்த பிறகு அடுத்த 20-25 ஆண்டுகளுக்கு சென்னைக்கு பிரச்சினை இருக்காது என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த ஈரடக்கு மேம்பாலம் திட்டத்திற்காக ஸ்டீல் மற்றும் சிமெண்ட் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் எனவும், இதனால் மாநில அரசுக்கு 500 கோடி ரூபாய் மிச்சமாகும் எனவும் முதல்வரிடம் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை துறையும் 1000 கோடி ரூபாய் செலவை ஏற்கவிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த டபுள் டெக்கர் மேம்பாலம் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை அமைக்கப்படும். மேம்பாலம் கட்டமைக்கும் பணிகள் ஜனவரிக்கு முன்பாக தொடங்கிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் அரசியல் நிலவரம், பாஜக - அதிமுக கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார்

கடந்த 16 ம் தேதி, ஆந்திராவில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நிதின் கட்காரி,

``நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சுமார் 1½ லட்சம் பேர் பலியாகிறார்கள். எனவே மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக சாலை விபத்துகளை நாம் குறைக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது.

இந்த விவகாரத்துக்கு நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். இந்த பணியில் உங்களுக்கு நான் உதவுவேன். தமிழக அரசு சாலை விபத்துகளையும், அது தொடர்பான மரணங்களையும் 25 சதவீதம் அளவுக்கு குறைத்திருக்கிறது. இது மிகவும் சிறப்பானதாகும். நீங்கள் (பிற மாநிலங்கள்) விபத்து குறைப்புக்காக திட்டம் மற்றும் நடவடிக்கை எடுத்தால், அதற்கு தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். அவர்களைப் பின்பற்றலாம்.

அதேநேரம் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்த விவகாரத்தில் நமக்கு உதவுகின்றன. விபத்துப் பகுதிகளை (கறுப்பு பகுதிகள்) மேம்படுத்துவதற்காக ரூ.14 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு அவை தயாராக இருக்கின்றன.

சாலை மேம்பாடு மற்றும் விபத்து குறைப்பு நடவடிக்கைகளுக்கு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். எனது பரிந்துரை என்னவெனில் ஒரு பணியாக மற்றும் ஒரு சவாலாக இதை நீங்கள் மேற்கொண்டால், இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என என்னால் 100 சதவீதம் உறுதி கூறமுடியும். மக்களுக்கு அது மிகப்பெரும் விஷயமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்"

என்று கூறியிருந்தார்.