திரைத்துறையில் குரூப் டான்ஸராக நுழைந்து, நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராக தற்போது இயக்குனராகவும் உயர்ந்து நிற்பவர் ராகவா லாரன்ஸ். சினிமா தாண்டி நிஜ வாழ்விலும் லாரன்ஸ் ஹீரோ தான். ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவிற்கு உதவி செய்து வருகிறார். காஞ்சனா ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தை இயக்கியுள்ளார். இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். 

கொரோனா நெருக்கடியால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் சேனலில் வெளியாகிறது. லக்‌ஷ்மி பாம் திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் சிங்கிளான புர்ஜ் கலிஃபா பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. தமிழில் வெளியானதை போல் காமெடி கலந்த ஹாரர் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணையும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்துள்ளது. 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ருத்ரன் என்ற அட்டகாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்க்கும்போது ஆக்ஷன் கலந்த கதையம்சம் கொண்ட படமாக இருக்குமா அல்லது வழக்கம் போல் திகில் படமாக இருக்குமா என்று ஆவலில் கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். 

தற்போது வெளியான போஸ்டரில் இயக்குனர் பற்றிய விவரம் இடம்பெற வில்லை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார் என்ற செய்திகள் திரை வட்டாரத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ். பி வாசு இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜிவி பிரகாஷ் இசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பது இதுவே முதல் முறையாகும். படத்தின் இயக்குனர் பற்றிய விவரம் 29-ம் தேதி வெளியாகும்.