கொரோனாவிலிருந்து உலகம் முழுவதுமாக விடுபட, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மருத்துவத்துவர்கள் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி உலகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது.

இருப்பினும் `எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது' என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். அதேபோல, தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.

பலவித பிரச்னைகள், எதிர்வினைகள் சொல்லப்பட்டாலும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பகுதியாக, ஆக்ஸ்ஃபோர் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான உலகளாவிய மக்கள் மீதான சோதனையிலும், இந்தியா பங்கெடுத்து வருகின்றது.

இந்தியாவில் கண்டறியப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான 'கோவேக்சின்' தடுப்பு மருந்தின் 2-ம் கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளது. பரிசோதனை செய்யப்பட்டதில் இதுவரை யாருக்கும் எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிவரும் சூழலில் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனாலும், ரஷ்யாவின் தடுப்பூசியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையே இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து சோதனை மேலும் துரிதப்படுத்தியுள்ளன. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை அளவில் உள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத்பயோடெக் நிறுவனமானது, ‛கோவாக்சின்' என்னும் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்து வருகிறது. தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது 2ம் கட்டமாக 150க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்தனர். இதில் யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 3-ம் கட்டமாக 100 பேருக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ‛மனிதர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதிப்பதில் தற்போது 2 கட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில் 3ம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ளது. இதுவரை கோவேக்சின் மருந்தால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. ஆனாலும், அந்த மருந்தின் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை தொடர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் 6 மாதம் வரை தேவைப்படலாம்,' எனக் கூறினர்.

இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி மருந்தை வளரும் நாடுகளுக்கு விநியோகிக்க உள்ள 'கோவக்ஸ்' அமைப்பில் நம் அண்டை நாடான சீனா நேற்றைய தினம் இணைந்தது. உலக சுகாதார நிறுவனம் 'கோவக்ஸ்' அமைப்பு வாயிலாக ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை விநியோகம் செய்ய உள்ளது.இதில் அமெரிக்கா சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் தவிர 172 நாடுகள் இணைந்துள்ளன.உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால் கோவக்ஸ் அமைப்பில் இடம் பெறவில்லை.சீனாவும் வளரும் நாடுகளுக்கு தானேநேரடியாக கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.