இந்தியாவில் கொரோனா வைரஸ், பல இடங்களில் பரவியதற்கு காரணம் டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்தான் என்று கடந்த செப்டம்பர் மாதம் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துப்பூர்வமாக திங்கட்கிழமை பதில் அளித்துள்ளார். அதில், டெல்லி காவல்துறை தெரிவித்த தகவலின்படி, கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக பல்வேறு துறைகள் வெளியிட்ட வழிகாட்டுகல்கள், உத்தரவுகளை மீறி மூடப்பட்ட பகுதியில் மிகப்பெரிய கூட்டம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்காக திரட்டப்பட்டது.

அதில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. முக கவசங்கள் அணிவதோ, கை சுத்திகரிப்பான்களோ சரியாக பயன்படுத்தப்படவில்லை. இதுவும் கொரோனா வைரஸ் பலருக்கு பரவ காரணமானது.

கடந்த மார்ச் 29ஆம் தேதி டெல்லி நிஜாமுதீன் தலைமையகத்தில் இருந்து டெல்லி காவல்துறையால் 2,361 பேர் வெளியேற்றப்பட்டனர். 233 பேர் காவல்துறையால் கைது செய்யப்ட்டனர். எனினும், ஜமாஅத் தலைமை நிர்வாகி மெளலானா மொஹம்மத் சாத் மீதான விசாரணை தொடர்ந்து நடக்கிறது என்று கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

'தப்லிக் ஜமாத் வெளிநாட்டவர்கள் பலியாடுகள் ஆக்கப்பட்டனர்': மும்பை உயர் நீதிமன்றம்
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது
இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையால் அனுமதியின்றி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை கூட்டியது, வெளிநாட்டினரின் இந்திய வருகையின்போது முறையான விசா அனுமதி பெறாமல் மாநாட்டில் பங்கேற்றது, தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் பார்வையாளர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால்தான் வைரஸ் நாடு முழுவதும் பரவியது போல பலவிதமாக செய்திகள் வெளிவந்தன. பல வெளிநாட்டினரும் இவ்வாறு சுற்றுலா விசாவில் வந்து தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட பலருக்கும் டெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள உயர் நீதிமன்றம் பிணை வழங்கி அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க இந்திய உள்துறைக்கு உத்தரவிட்டிருந்தன.

மேலும், தப்லீக் ஜமாஅத் இயக்கத்தினரால்தான் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியது போல செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாடு மூலமே பலருக்கும் வைரஸ் பரவியதாக இந்திய உள்துறை மாநிலங்களவையில் கூறியிருக்கிறது.

இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா பரவலுக்குக் காரணம், டெல்லியில் நடைபெற தப்லிக் மாநாடுதான் என்று கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட்டன. இந்த ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இவற்றை தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நேற்று (அக்டோபர் 8) விசாரணைக்கு வந்தன.

அப்போது உச்ச நீதிமன்றம், ``பேச்சு சுதந்திரம் சமீபத்திய காலங்களில் மிகவும் அதிகமாக தவறாகப் பயன்படுத்தப்படும் சுதந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டது. மேலும் மனுதாரர்களின் மனுவுக்குப் பதிலாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவை கடுமையாக விமர்சனம் செய்தது உச்ச நீதிமன்றம்.

``மத்திய அரசின் பதில் மனுவில் மோசமான எந்தவொரு குறிப்பிட்ட நிகழ்வுகளையும் கருத்தில் கொள்ளவில்லை. மிக முட்டாள்தனமாக, அவதூறுகளோடு தயாரிக்கப்பட்ட பதில் மனுவாகத் தெரிகிறது. நீங்கள் இந்த நீதிமன்றத்தை இவ்வாறு நடத்த முடியாது. சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவதூறுகளால் நிரம்பியுள்ளது மனு. இதை ஜூனியர் அதிகாரிகள் தயாரித்திருப்பார்கள் என்று நினைக்கிறோம். இதுபோன்ற பதில் மனு மிகவும் தவிர்க்கக்கூடியது. மீண்டும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுங்கள்” என்று தலைமை நீதிபதி போப்டே மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கூறினார்.

இதற்கு ஒப்புக் கொண்ட துஷார் மேத்தா, புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதாக உச்ச நீதிமன்றத்திடம் உறுதியளித்தார்.

``குறிப்பிட்ட சம்பவங்கள் (மனுதாரரால் மேற்கோள் காட்டப்பட்டவை) பற்றி மத்திய அரசு என்ன நினைக்கிறது என்பதை தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் எங்களிடம் சொல்ல வேண்டும், இப்போது அளித்திருப்பது போன்ற முட்டாள்தனமான செயல்களைச் செய்யக்கூடாது" என்று போப்டே கூறினார்.

மனுதாரர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ், “இந்த பிரச்சினையில் கருத்துச் சுதந்திரத்தை பற்றி சொல்லி மத்திய அரசு குழப்புகிறது” என்று வாதாடினார். அப்போது தலைமை நீதிபதி, ``சமீப காலங்களில் நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சுதந்திரங்களில் ஒன்றாகும்" என்று குறிப்பிட்டு வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.