டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரபலமான ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2% பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்தார். இதன்படி தற்போது டுவிட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் இருந்து வந்தார். இதையடுத்து அவரை டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், திடீரென டுவிட்டர் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டாம் என எலான் மஸ்க் நிராகரித்துவிட்டார். 

இந்நிலையில் எலான் மஸ்க் அதிரடியாக டுவிட்டர் நிறுவனத்தையே விலைக்கு வாங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கிட்டதட்ட இந்த பேச்சுவாரத்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீர்ரென்று எலன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார். மேலும் Twitter CEO என்ற ஹேஷ்டாக்  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதனைத்தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் இந்திய மதிப்பில் ரூ. 4,200 ஆயிரம் கோடிக்கு அமெரிக்க மதிப்பில் 44 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும்,  எலான் மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் தற்போது வெளியாகவில்லை.

ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய விரும்புவதாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் தற்போது வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  எலான் மஸ்க்கிற்கு  ட்விட்டர் நிறுவனம் விற்கப்பட்டுள்ளதையடுத்து இணையத்தில் எலான் மஸ்க்   பழைய ட்வீட்  ஒன்று வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.