கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் உயிரிழந்த சமப்வம், ஒட்டுமொத்த ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கால்பந்தாட்ட உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரை உச்சரிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு, கால்பந்தாட்டத்தில் ஜொலித்து வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

அதுவும், கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் சர்வதேச அணி மற்றும் பிரிமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இப்படியான உலக புகழ் பெற்று திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கையில் தான் தற்போது ஒரு புயலே வந்து, அடித்து தூக்கி வீசியிருக்கிறது. ஆம், அவரது வாழ்க்கையில், அவர் சற்றும் நினைத்துக்கூட பார்க்கா முடியாத ஒரு பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்.

அதாவது, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு திருமணமாகி  ஜியோர்ஜியா என்ற மனைவி உள்ள நிலையில், இந்த தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த 4 குழந்தைகளில் இருவர், இரட்டை குழந்தைகள் ஆவார்.

அத்துடன், “நாங்கள் அடுத்தும் இரட்டை குழந்தைகளுக்கு காத்திருப்பதாக” கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரொனால்டோ அசத்தலான அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த சூழலில் தான், ரொனால்டோவுக்கும் - அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்க்கும் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை தற்போது உயிரிழந்து உள்ளதாக, அந்த தம்பதியினர் அறிவித்து உள்ளனர்.

தனது குழந்தை உயிரிழந்த செய்தியை ரொனால்டோ, தற்போது தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார்.

அந்த பதிவில், “இந்த நாள் எங்களுக்கு மிகவும் வருத்தமான நாள். எங்களின் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டது. ஒரு பெற்றோராக இந்த மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்தப் பெற்றோரும் உணரக்கூடிய கடுமையான வலி இது” என்றும், ரொனால்டோ குறிப்பிட்டு உள்ளார்.

“எங்களுக்கு பிறந்து உள்ள மகள் அந்த மரணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையிலான தைரியத்தை கொடுக்கிறார் என்றாலும், ஒரு பெற்றோராக ஒரு குழந்தையை தவிர்த்துவிட விட முடியவில்லை” என்றும், கூறியுள்ளார்.

அத்துடன், மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், பிற மருத்துவ பணியாளர்களுக்கும் எங்களது நன்றிகள் என்றும். நாங்கள் இந்த சூழலில் தனிமையாக இருக்க விரும்புகிறோம்” என்றும், ரொனால்டோ உருக்கமாக கூறியுள்ளார்.

முன்னதாக ரொனால்டோவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், அதில் பெண் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் சூழலில், ஆண் குழந்தை உயிரிழந்திருக்கிறது. இதனால், ரொனால்டோவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

இதனையடுத்து, அவரது ரசிகர்கள் ரொனால்டோவுக்கு ஆறுதலை கூறி, அவரது மனதை தேற்றும் விதமாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.