பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் இந்திய திரையுலகின் சிறந்த நடிகையாகவும் திகழும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாராகின்றன. முன்னதாக இயக்குனர் செல்வராகவன் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாணிக் காயிதம் வருகிற மே 6-ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு பகத் பாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 

மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா படத்தில் கதாநாயகியாகவும், சிரஞ்சீவி உடன் இணைந்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார் கீர்த்தி. 

இந்த வரிசையில் மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் ரிலீசாகவுள்ள திரைப்படம் வாஷி. விஷ்ணு.ஜி.ராகவ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள வாஷி படத்தை ஜி.சுரேஷ் குமார் தயாரிப்பில், மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

வாஷி படத்திற்கு, ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.வழக்குரைஞர்கள் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள வாஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  தற்போது டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.