தனக்கே உரித்தான ஸ்டைலில் பலவிதமான திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷுடன் இணைந்துள்ள திரைப்படம் நானே வருவேன். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

சிறந்த இயக்குனராக நல்ல படைப்புகளை வழங்கி வந்த இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவனின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனிடையே இயக்குனர் செல்வராகவன் முதல்முறை நடிகராக களமிறங்கிய சாணிக் காயிதம் திரைப்படம் வருகிற மே 6ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ராக்கி திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள சாணிக் காயிதம் படத்தை  ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரிலீசாகவிருக்கும் சாணிக் காயிதம் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாமினி யக்ணமூர்த்தி ஒளிப்பதிவில், சாம்.CS இசையமைத்துள்ளார். இந்நிலையில் சாணிக் காயிதம் திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…