உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க - ரஷ்யா இடையே வார்த்தை யுத்தம் தற்போது வெளிப்படையாகவே தொடங்கி உள்ள நிலையில்,இரு நாடுகளும் மாறி மாறி விமர்சனம் செய்யத் தொடங்கி உள்ளன.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா எந்நேரமும் போர் தொடுக்கலாம் என்ற அபாயகரமான சூழல் தற்போது அங்கு நிலவி வருகிறது.

இதனால், ரஷ்யா போர் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று, அமெரிக்கா தொடர்ந்து அறிவித்து வந்த நிலையில், ரஷ்யாவை வெளிப்படையாகவே அமெரிக்கா எச்சரிக்கைத் தொடங்கியது.

இதனால், ரஷ்யாவை அமெரிக்கா வெளிப்படையாகவே பகைத்துக்கொண்டது. ஆனாலும், இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ரஷ்யா,  உக்ரைன் நாட்டின் மீது போர் தொடக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

இந்த சூழலில் தான், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, இன்னும் ஒரு வார காலத்திற்குள் போர் தொடுக்கும் என்றும் நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தான், “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அதற்கு கடுமையான விலை கொடுக்க நேரிடும்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக வெளிப்படையாகவே எச்சரித்து உள்ளார், என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைனின் எல்லைப்பகுதியில் ரஷ்யா வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துவரும் நிலையில், அங்கு எந்த நேரத்திலும் போர் மூளும் சூழல் தற்போது உறுதியாக உள்ளது. இப்படியான சூழலில் தான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலமாக இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்து உள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலானது, சுமார் ஒரு மணி நேரம் நீடித்த நிலையில், “உக்ரைன் மீது போர் தொடுத்தால், அதிகம் மக்கள் துயரத்திற்கு உள்ளாவார்கள்” என ஜோ பைடன் கூறியதாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக புதினிடம் கூறிய ஜோ பைடன், அதே நேரம் வேறு எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாகவும்” அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, ஜோ பைடன் - புதின் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர், “ரஷ்ய அதிபர் புதினிடம் எந்த மாற்றமும் இல்லை என்றும், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் தொடர்வதாகவும்” தெரிவித்தார். 

அதன் தொடர்ச்சியாகவே, “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் வெறி உச்சகட்டத்தை அடைந்து விட்டதாக” ரஷ்யா, மிக கடுமையாக விமர்சித்து உள்ளது.

இது தொடர்பாக பேசிய ரஷ்ய வெளியுறவு ஆலோசகர் யூரி உஸகோ, “ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பேச்சு வார்த்தையை தொடர ஒப்புக்கொண்டிருப்பதாக” கூறினார். 

மேலும், இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு ஆலோசகர் யூரி உஸகோ, “ரஷ்யாவை பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் அமெரிக்க ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக” கவலைத் தெரிவித்தார்.

அத்துடன், “இரு நாட்டு தலைவர்களும் அனைத்து மட்டத்திலும் பேச்சு வார்த்தையை தொடர்வது என ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், உக்ரைனிலிருந்து நேட்டோ படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், அந்த நாட்டை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது உள்ளிட்ட கருத்துக்களை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என்றும், தெரிவித்தார். 

“தனது எல்லையை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்திருப்பதகாவும்” ரஷ்யா தெரிவித்து உள்ளதால், இரு நாடுகள் இடையேயான வார்த்தை யுத்தம் தொடங்கி விட்டது என்றே கூறப்படுகிறது.