தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் வலம் வரும் சூர்யா தொடர்ந்து சிறந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் சூர்யா தயாரித்து நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார். இதனை அடுத்து சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா தெலுங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்காக தெலுங்கிலும் டப்பிங் பேசியுள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் நடிகர் சூர்யா டப்பிங் ஸ்டுடியோவில் தெலுங்கு டப்பிங் பணியில் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியானது. அந்த புகைப்படம் இதோ…