அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசி ஒமிக்ரான் வகை கொரோனாவை 70 சதவிகிதம் கட்டுப்படுத்துவதாக தென்னாப்பிரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா எனும் கொடிய வைரஸ் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. 

இந்த கொரோனா வைரசை அழிப்பதற்கான ஒரே ஆயுதமான தடுப்பூசி கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. உலகம் முழுவதும் பல்வேறு வகையிலான தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 

இந்த தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் அதே வேளையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது உருவை மாற்றி வெவ்வேறு வகையிலான வைரசாக உருவெடுத்து வருகிறது.

அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றின. இதில் டெல்டா வகை கொரோனா உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சூழலில் தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 

pfizer vaccine

ஆனால் மக்கள் இதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸ் வந்துவிட்டது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த மாதம் 24-ந் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

இந்த உருமாறிய ஒமிக்ரான் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியா உள்பட 63-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் கால்பதித்து விட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் திரிபு டெல்டா வைரசை விட அதிக வீரியமிக்கது மற்றும் அதிவேகத்தில் பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழப்புகள் இல்லை என்ற வேளையில்தான் இங்கிலாந்தில் ஒமிக்ரானால் ஒருவர் உயிரிழந்த செய்தி நேற்று வெளியாகி உலக நாடுகளை அதிர வைத்தது. இதனால் ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறித்த ஆய்வுகள் நீடித்து வருகின்றன. 

இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசி ஒமிக்ரான் தொற்று பாதிப்பால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 70 சதவீதம் வரை குறைப்பதாக தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

pfizer vaccine

தென்னாப்ரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில், இரண்டு தவணை ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருந்த 70 சதவிகிதம் பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அந்த அளவுக்கு ஒமிக்ரான் பாதிப்பை இந்த தடுப்பூசி தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 33 சதவிகிதம் ஒமிக்ரான் தொற்றே ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி செயல்பாட்டில் வயது அடிப்படையில் சிறிது மாறுபாடு இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரானை கட்டுப்படுத்துவதில், ஃபைசர் தடுப்பூசி பெரிதும் உதவும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தற்போது உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள், எந்த அளவு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் என்று இதுவரை எந்த மருந்து நிறுவனங்களும் உறுதியாகத் தெரிவிக்காதநிலையில், இந்த ஆய்வின் மூலம் ஒமிக்ரானுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி நல்ல  பாதுகாப்புத்திறனை அளிப்பது தெரியவந்துள்ளது.