டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்களை இயக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. அந்த நாடுகளுக்கு மட்டும் தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இடையிலான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் 15 முதல் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவையை துவங்க முடிவு  செய்யப்பட்டது.

 covid19 omicron

ஆனால்  தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் ஒமிக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், ஜப்பான், இஸ்ரேல்  உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுக்கு உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் கொரோனா, பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்பே ஐரோப்பியாவில் இருந்தது தெரியவந்துள்ளது.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியில் குறைந்தது 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிவேக பரவல், மீண்டும் கொரோனா பாதிப்பின் உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒமிக்ரான் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 24 ஆம் தேதி வெளியானது. ஆனால், நெதர்லாந்தின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தேசிய நிறுவனம் நவம்பர் 19 , நவம்பர் 23-ம் தேதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளிலே ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

covid19 omicron

மேலும் மற்ற மாறுபாடுகளை காட்டிலும் ஒமிக்ரான் தீவிரமானது என கண்டறிந்தாலும், ஆரம்பக்கால சோதனை முடிவுகள் மிதமான பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும் பல சோதனைகள், தரவுகள் ஆய்வுக்கு பிறகே அதன் வீரியம் தெரியவரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மீண்டும் வழக்கமான வர்த்தக விமான போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்த  முடிவு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது ‘ஏர் பபுள்’ முறையில் இயக்கப்படும் விமான சேவை  தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இந்தியாவில் 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு பயணக்கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக விமானநிலையங்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடுதலாக்கப்பட்டுள்ளது.