உலகம் முழுவதும் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

“உலகம் முழுவதும் கண்டறியப்பட்டு உள்ள கொரோனா வைரஸ்களில் ‘ஒமைக்ரான்’மிகவும் மோசமானது” என்று மருத்துவ விஞ்ஞானிகள், உலக நாடுகளை  எச்சரித்து இருக்கும் நிலையில், பயணிகளுக்கு மிக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதுவும், ஒமைக்ரான் வகை என்னும் கொடிய கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு மீண்டும் மிக கடுமையாக்கி உள்ளது.

அதுவும், இந்தியாவில் கொரோனா 2 வது கட்ட பரவல் முற்றிலுமாக குறைந்து வரும் நிலையில் தான், தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனாவால், உலகின் பிற நாடுகளுக்கும் மிக வேகமாக அது பரவி வருகிறது. 

இதனை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தற்போது மீண்டும் பழைய படியே மாற்றி அமைத்திருக்கிறது. 

அதன்படி, இந்திய பயணிகள் யாராக இருந்தாலும், தங்களது பயணத்தை தொடங்குவதற்கு முந்தைய 14 நாட்கள் எங்கெங்கு சென்றார்கள் என்ற முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இவற்றுடன், கடந்த 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே பயணிகள், பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது. 

குறிப்பாக, ஒமைக்ரான் வகை கொரோனா பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் முடிவு வரும் வரை சம்மந்தப்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தான் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மேலும், தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவி விடாத வகையில் தமிழக அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் படி, சென்னை விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு முன்பை விட தற்போது இன்னும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அதன் படி, பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. 

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தான், ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று மதியம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 

அதன் படி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி காட்சியின் வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற இருக்கிறது. 

இந்த கூட்டத்தில், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.