“ராமநாதபுரம் மாணவன் மணிகண்டன் விஷமருந்தி உயிரிழந்துள்ளதாக” ஏடிஜிபி தாமரைக்கண்ணன் புதிதாக விளக்கம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்து உள்ள நீர்கோழியேந்தலை சேர்ந்த லட்சுமணகுமார் என்பவரின் மகன் 21 வயதான மணிகண்டன், அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

இவர், கடந்த 5 ஆம் தேதி மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கரவாகனத்தில் வந்த மணிகண்டன், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு மணிகண்டனை அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தததாகவும் கூறப்படுகிறது. 

அதன் பிறகு, மணிகண்டனின் இருசக்கர வாகனம் மற்றும் செல்ஃபோனை பறிமுதல் செய்த போலீசார், இது பற்றி அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

போலீசார் அழைத்ததின் பேரில் காவல் நிலையத்திற்கு வந்த இருவரும், மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளனர். 

ஆனால், வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மருத்துவமனையில் மருத்துவர்கள் மணிகண்டனை பரிசோதித்த போது, “மணிகண்டன் இறந்து போனது” தெரிய வந்தது. 

இது குறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம், மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் தொடர்ச்சியாக, மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து #JusticeForManikandan என்ற ஹேஷ்டேக்கும் ட்ரண்ட் செய்யப்பட்டது.

அதன் பின்னர், இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான சர்ச்சை போலீசாருக்கு எதிராக பல கண்டன குரல்களை எழுப்பியது.

இந்த நிலையில் தான், சற்று முன்னதாக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து, மாணவன் மணிகண்டன் இறப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

அதன்படி பேசிய  சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், “காவல்துறையினர் தாக்கியோ, அடித்தோ மணிகண்டன் உயிரிழக்கவில்லை” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “ராமநாதபுரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் வீட்டில் இருந்து விஷ பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், காவல்துறை அடித்ததால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்திருப்பது உடற்கூராய்வு ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது என்றும், இதனால் இனி சமூக வலைதளங்களில் அவரது உயிரிழப்பு தொடர்பான பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்றும், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கேட்டுக்கொண்டு உள்ளார்.