கொரோனா வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் கொரோனா ஊரடங்கின்போது தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியது. 

பின்னர் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்தநிலையில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதால், வரும் ஜனவரி மாதம் முதல் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழிமுறைகளை வெளியிட்டிருந்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையில் மீண்டும் கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் என்ற புதிய வகை திரிபு அதிவேகத்தில் பரவி வருவதால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற திட்டத்தை கூகுள் நிறுவனம் காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

google vaccine rule

இது தொடர்பாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் இன்க் (Alphabet Inc) தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெமோவில், “ஊழியர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்தியதன் விவரம் குறித்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தால் அதற்கான மருத்துவ ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மதரீதியிலான விதி விலக்கு கோர விரும்பினால் அதற்கான ஆவணங்களும் காட்டப்பட  வேண்டும். 

அப்படி இல்லாத பட்சத்தில் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்போம். ஜனவரி 18 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையெனில், 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் ஊழியர்கள் அனுப்பப்படுவார்கள். 

அதைத்தொடர்ந்து சம்பளம் இல்லாத விடுப்பு 6 மாதங்களுக்கும், அதனைத் தொடர்ந்தும் பணி நீக்கமும் செய்யப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த கூகுள், "தடுப்பூசி செலுத்தக்கூடிய  எங்கள் ஊழியர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களின் தடுப்பூசி கொள்கையிலும் நாங்கள் உறுதியாக நிற்போம்” எனத்தெரிவித்துள்ளது. 

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு, தற்போது பரவிவரும் ஒமிக்ரான் குறித்த அச்சம் காரணமாக ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

google vaccine rule

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி எதிர்ப்பாளர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் அதிபர் பைடனின் தடுப்பூசி கட்டாயம் உத்தரவைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது. ஒன்றரை லட்சம் ஊழியர்கள் கொண்ட கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த ஊக்குவித்து வருகிறது.

கூகுள் அலுவலகத்துக்குள் நுழையும் யாராக இருந்தாலும் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசிக்கு வேறு எதுவுமே மாற்றில்லை என்றும் கூகுள் வலியுறுத்தியுள்ளது.

மேலும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திய ஆவணங்களை சமர்பிக்க கெடு விதித்திருந்தது. தற்போது ஜனவரி 18 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.