“ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறி, தன்னை சுற்று சுழன்று வந்த வதந்திகளுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

“விராட் கோலி - ரோகித் சர்மா இடையே மோதல் போக்கு மற்றும் ஈகோ இருப்பதாக” தகவல்கள் வெளியாகி, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, இந்திய கிரிக்கெட் அணியானது, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இதில், டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26 அன்றும் ஒரு நாள் தொடரான ஜனவரி 19 ஆம் தேதி அன்றும் தொடங்குகின்றன. 

இதில், டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்ந்து வருகிறார். ஆனால், ஒரு நாள் தொடருக்கு மட்டும் கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இது தவிர, “இந்திய அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், விராட் கோலி அதிருப்தியுடன் இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகளும் வதந்திகளும் வெளியான வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தாம் விளையாட உள்ளதாக” விராட் கோலி தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய விராட் கோலி, '“பிசிசிஐ யிடம் நான் எந்த ஓய்வும் கேட்கவில்லை என்றும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராக உள்ளேன்” என்றும், தெளிவுப்படத் தெரிவித்து உள்ளார். 

அத்துடன், “எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக இவற்றுக்கெல்லாம் நான் விளக்கமளித்து ஓய்ந்தே விட்டேன்” என்றும், அவர் கூறினார். 

மேலும், “நான் கேப்டனாக இல்லாமல் அணி வீரராக விளையாட தயார் என ஏற்கனவே தேர்வுக்குழுவிடம் கூறிவிட்டேன் என்றும், வதந்திகள் யார் பரப்புகிறார்களோ அவர்களிடம் இது பற்றி நீங்கள் போய் கேளுங்கள்” என்றும், விராட் கோலி தெரிவித்தார்.
 
முக்கியமாக, “தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்ட பின்பு, ஒரு நாள் அணிக்கு நான் கேப்டன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் என்னிடம் கூறினார் என்றும், என்னைப் பொறுத்தவரை எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கு நான் எப்போதும் நேர்மையாகவே இருப்பேன்” என்றும், விராட் கோலி தெளிவுப்படத் தெரிவித்து உள்ளார்.