இரு அரசியல்வாதிகளுக்கு இடையேயான சண்டையை ஒத்தைக்கு ஒத்தை என்று, ரிங்கில் ஏறி குத்துச்சண்டையின் மூலம் மேயரும் - முன்னால் கவுன்சிலரும் தீர்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, இரு கட்சியினரும் தலா 1300 ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்து சண்டையை பார்த்து ரசித்த நிகழ்வு, இன்னும் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டில் தான் இப்படி ஒரு அரசயில் சண்டை டிக்கெட் போட்டு விற்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் நடந்துள்ளது, உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல்வாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது அன்றாட நிகழ்வு. மேடைக்கு மேடை ஒருவரையொருவர் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய வாக்குவாதத்தால் பொதுமக்களுக்கு பெரிதாக பலன் ஏதுமில்லை.நேர விரயம் தான் மிச்சம்.

உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் ஆளும் கட்சி என்று ஒன்றும் இருக்கும் போது, அதற்கு எதிர் கட்சியினரும் இருப்பது வழக்கம் தான்.

ஆனால், எந்த நாடாக இருந்தாலும் இரு கட்சியினரும் தங்களது எதிர் எதிர் கருத்துக்களை இரு புறமும் அமர்ந்து டி.வி.யில் விவாதித்து, தங்களது கருத்துக்களையும், கட்சி சார்ந்த விளக்கங்களையும் பொது மக்களிடம் விவதமாக பேசி வருகின்றனர். இது தான், உலகம் முழுவதும் இப்போது வரை நடந்திருக்கிறது.

ஆனால், இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 2 அரசியல்வாதிகள், தங்களுக்கு இடையே உள்ள  பிரச்சினைகளை குத்துச்சண்டை மூலமாக தீர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது, உலகம் முழுவதும் குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, ஜூஜிட்ஸு, கராத்தே, தாய் பாக்சிங் போன்ற பலவிதமான தற்காப்பு கலைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி சண்டையிடும் முறை தான் கலப்பு தற்காப்புக்கலை முறையாகும். 

இந்த சண்டையை தான், இந்த இரு அரசியல்வாதிகளும் பொது மக்கள் முன்னிலையில் போட்டுக்கொண்டு, தங்களது பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

அதாவது, வடக்கு பிரேசிலின் அமேசோனாஸ் மாநிலத்தில் உள்ள போர்பா என்னும் பகுதியில் அந்த நகரின் மேயர் சிமாவோ பெய்ஷோட்டோ இருந்து வருகிறார். அதே நேரத்தில், இந்த பகுதியில் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் எரினியூ ஆல்வாஸ் டா சில்வா இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தான், தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்துகொண்டே இருந்தன.

இதனால், சில்வா தற்போதைய மேயர் மீது, முன்னாள் கவுன்சிலர் அடுக்கடுக்கான புகார்களை எழுப்பி வந்தார். 

அத்துடன், இணையம் வழியாக அவருடைய செயல்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்தார். இவற்றுடன், அவரை அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் திட்டியும் தீர்த்திருக்கிறார்.

அதன் உச்சக்கட்டமாக, “தன்னுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு வருமாறு” வீடியோவில் பேசிய முன்னாள் கவுன்சிலர், அந்த பகுதியின்  மேயருக்கு அழைப்பு விடுத்தார். 

அந்த வீடியோவுக்கு பதில் வீடியோ மூலமாக பேசிய மேயர், “நான் சண்டைக்கு தயார், எங்கே, எப்படி, எப்போது?” என்று, கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன்படி, சண்டையும் உறுதியானது. இந்த சண்டையில் “அடி, உதை, குத்து உள்பட சகல வித்தைகளும் இந்த சண்டையில் அனுமதிக்கப்பட்டதாக” விதிமுறைகள் எழுதப்பட்டன.

குறிப்பாக, இந்த சண்டையை ரசிக்க பெருந்திரளான மக்கள் திரண்டனர். அத்துடன், இருவருடைய ஆதரவாளர்களும் தலா 1300 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு, சண்டை நடந்த அரங்கத்திற்கு வருகை தந்தனர்.

அதன்படி, போட்டியாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ரவுண்டு கட்டி சரமாரியாகத் தாக்கிக்கொண்டு, கடுமையாக சண்டைப்போட்டனர்.

இந்த சண்டையில், இருவருமே தங்களது கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசி, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

இந்த சண்டைக்கு, நடுவர் ஒருவரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சண்டையின் முடிவை அவர்கள் அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.