இந்திய சினிமா கண்டிராத பிரம்மிப்பின் உச்சமாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட படைப்பிற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். 

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக விளங்கும் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருண்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரியாக இளைய திலகம் பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, மதுராந்தகராக ரஹ்மான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாண்டியர்களின் ஆபத்துதவிகளாக, வில்லன்களாக வரும் ரவிதாசன், சோம்பன் சாம்பவன், தேவராளன் என்கிற பரமேஸ்வரன், வரகுணன் ஆகிய கதாபாத்திரங்களில் கிஷோர், ரியாஸ்கான், வினய் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். ஒட்டு மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கும் மிகமுக்கிய நாயகனாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உதவியோடும் வசனங்களோடும் திரைப்படமாக உருவாக்கிய இயக்குனர் மணிரத்னம் நாவலிலிருந்து திரைப்படம் உருவானது எப்படி..? என விவரிக்கும் புதிய BTS வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அட்டகாசமான அந்த வீடியோ இதோ…