முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆதித்யாராம் குழுமத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) பிரிவான ஆதித்யராம் ஹெல்பிங் ஹேண்ட்ஸ், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தகுதியுடையவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

சமீபத்தில், ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான ஆதித்யராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த கே சுரேஷ் மற்றும் ஈஸ்வர் கார்த்திக் ஆகிய இரு பாடிபில்டர்களின் கனவுகளை நனவாக்க உதவியுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கே சுரேஷ் என்பவர் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வந்தார். மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உடற்கட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய பாடி பில்டிங் மற்றும் பிஸிக் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் - 2022-இல் பங்கேற்க சுரேஷ் விரும்பினார்.

ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்த அவர், பின்னர் ஆதித்யாராமை அணுகினார். சுரேஷின் ஆர்வத்தையும் திறமையையும் புரிந்து கொண்ட ஆதித்யராம், அவருக்கு பண உதவி மட்டுமின்றி, பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கினார்

ஆதித்யராம் உதவியால் 54-வது ஆசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கட்டு விளையாட்டு சாம்பியன்ஷிப் - 2022-இல் பாரா பாடி பில்டிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் சுரேஷ்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஈஸ்வர் கார்த்திக்குக்கு கல்லூரி நாட்களில் இருந்தே பாடிபில்டராக சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்துள்ளது. வறுமையில் வாடிய போதும் அவரது இந்த ஆர்வம் மூலம் மிஸ்டர் சென்னை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆனால் நிதி நிலைமை காரணமாக அவரால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியவில்லை. ஆசிய பாடி பில்டிங் போட்டி - 2022-இல் பங்கேற்க ஈஸ்வர் கார்த்திக் விரும்பினார். 

பல இடங்களில் முயற்சி செய்த பிறகு, ஆதித்யராமை ஈஸ்வர் கார்த்திக் அணுகினார். ஈஸ்வர் கார்த்திக்கின் திறனையும் ஆர்வத்தையும் அடையாளம் கண்ட ஆதித்யராம், அவருக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்தார். 

மாலத்தீவில் நடைபெற்ற ஆசிய பாடி பில்டிங் போட்டி - 2022-இல் பங்கேற்ற ஈஸ்வர் கார்த்திக் சீனியர் ஆண்கள் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப்பில் (100 கிலோ பிரிவு) தங்கப் பதக்கம் வென்றார்.

ஆதித்யராம் குழுமத்தின் இம்முயற்சி குறித்து பேசிய ஆதித்யராம், ஈஸ்வர் கார்த்திக் மற்றும் சுரேஷின் சாதனைகளால் தான் பெருமைப்படுவதாக கூறினார்.

"இவர்களை போன்ற திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கமளிப்பது நமது கடமை என நான் நம்புகிறேன். ஈஸ்வர் கார்த்திக், சுரேஷ் போன்றவர்கள் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதுபோன்ற அசாத்திய திறமைகளை கொண்டவர்கள் நம் நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் இருக்கின்றனர். மக்கள் இவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பது என் கருத்தாகும்," என்று அவர் மேலும் கூறினார். 

சுரேஷ் மற்றும் ஈஸ்வர் கார்த்திக் இருவரும் ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆதித்யராமுக்கு தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அவர்களது நீண்டநாள் கனவுகளை நனவாக்க ஆதித்யராமின் ஆதரவு பெரிதும் உதவியது என்றும் கூறினர்.