சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் சமூகவிரோத சக்திகள் மற்றும் கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்று கலெக்டர் மாநாட்டில் போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில், மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அனைவரையும் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு வரவேற்று பேசினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது: 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவற்றுள் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு இருக்கிறோம். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்குத்தான் இந்த ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படுகிறது.

புதிய முதலீடுகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஒரு லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய சட்டம் ஒழுங்கு மிக மிக முக்கியமாகும். சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ளமாட்டேன்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்களை அரசு அனுமதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் தயவுதாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்துவிடக்கூடாது.

எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே நமது அரசின் குறிக்கோள். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய சமூகவிரோத சக்திகளை கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் அமைதியில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருப்பதால், அதை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, பொதுவான கோரிக்கை மற்றும் தனிநபர் கோரிக்கை என தரம்பிரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம், வட்டம், வட்டாரம் மற்றும் சிற்றூர் அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதால், பெரும்பாலான மக்கள் கண்ணீரோடு தலைமைச்செயலகத்திற்கு மனுக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை கருணையோடு பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நமது அரசின் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்கள் துறைவாரியாகத் தொகுக்கப்பட வேண்டும். எனது கனவு திட்டமாக இருக்கும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த உயரத்தை அடைய யாரோ ஒருவர் தூண்டுதலாக அமைந்ததுபோல, நீங்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக மாறி ஊக்கப்படுத்த வேண்டும். அனைவரும் நேர்மையாக, ஒளிவுமறைவற்ற, வெளிப்படைத்தன்மையோடு, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் உங்களுக்கு இந்த அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

உங்கள் மாவட்டத்தில் ‘டாஷ் போர்டு’ ஒன்றை உருவாக்கி, சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து முழுமையாக தீர்வு காண வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும், குற்றங்களும் நிகழ்ந்து முடிந்த பின்பு அவற்றைத் தீர்ப்பதற்கும், புலனாய்வு செய்வதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளைவிட, அவை நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகள்தான் மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். இதில்தான் நமது வெற்றி உள்ளது. ஆட்சியின் மதிப்பீடு, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில்தான் உள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது வருங்காலத்திலும் தொடர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.