5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி.. “ராகுல் காந்தி உருக்கமாக சொன்னது என்ன?”
“5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், இந்த 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசம் சட்டசபைக்கு ஏழு கட்டங்களாகவும், 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் இந்த தேர்தலானது நடைபெற்றது. இப்படியாக நடைபெற்ற இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்றது. ஆனால், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி, தங்களது ஆட்சியைத் தக்க வைக்க கடுமையாக போரடியாது.
அதன் படி, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
அத்துடன், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் வெற்றி கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதே போல் உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.
குறிப்பாக, இந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியானது போட்டி போட்ட நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய அளவில் பின்னடவை சந்தித்து வருகிறது.
அத்துடன், கோவாவில் மட்டும் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும், அங்கு மட்டும் சுமார் 20 இடங்களில் பாஜக முன்னனியில் இருந்து வருகிறது. கோவாவை பொறத்த வரையில் காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் மட்டுமு முன்னிலையில் இருக்கிறது.
இதே நிலை அப்படியே தொடரும் பட்சத்தில், பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்றபடி இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
முக்கியமாக, இந்த 5 மாநிலத்தில் மொத்தமாக உள்ள 690 தொகுதிகளையும் சேர்த்து பார்க்கும் போது, வெறும் 68 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.
அதன்படி, “5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
“இந்த தேர்தலில் காங்கிரசுக்காக கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொண்டர்களுக்கு எனது நன்றி என்றும், இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று மக்கள் நலனுக்காக தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்” என்றும், ராகுல் காந்தி மிகவும் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
அதே போல், “5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்” என்று, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, “எங்களது யுத்தம் தற்போது தான் தொடங்கியுள்ளது என்றும், தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம்” என்றும், பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.