முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம், திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார்.

இவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறப்படுகிறது. 

அதாவது, மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவர் அரசியலில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தது முதல், தயாளு அம்மாவிற்கும் உடல் நிலை அப்போதே பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுவும், கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரைப் பார்க்க தயாளு அம்மாள் வீல்சேரின்  மூலமாகத்தான் அழைத்துவரப்பட்டார் என்றும், கூறப்படுகிறது.

இதனால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வரும் அவரை கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளின் போதும், அரசின் முக்கிய விழாக்களுக்கு முன்பாகவும் முதலமைச்சரும், மகனுமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

இதனால், தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்கிற தவலும் கிடைத்து உள்ளன. 

ஏற்கனவே, கடந்த 2018 ஆம் ஆண்டு தயாளு அம்மாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்படபோது, அப்போதும் அவர் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பிறகே அவர் வீடு திரும்பினார். அதன் அடிப்படையிலேயே, தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

குறிப்பாக, வயது மூப்பின் காரணமாக தயாளு அம்மாவிற்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படியே, அவரை இன்று பிற்பகல் நேரத்தில் கோபாலபுரம் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக தயாளு அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதனையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று, தனது தாயாரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.