நில அபகரிப்பு புகாரிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில் இருக்கும் 49 வது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் நரேஷ் என்ற நபர், அத்துமீறி புகுந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், அவரது சட்டையை கழற்றி, அரை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்து பேரணியாக அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுபற்றி தனது ஃபேஸ்புக் வலைதளத்திலும் ஜெயக்குமார் வெளியிட்டார். 

அத்துடன், பொது இடத்தில் ஒரு மனிதனை அரை நிர்வாணப்படுத்தி, அடித்து இழுத்து பேரணியாக அழைத்துச் சென்றதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த நிலையில் தான், இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.  இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடியாக அப்போது உத்தரவிட்டது.

பின்னர், சென்னை பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனு கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வர இருந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கில் ஜெயக்குமாரை சென்னை காவல் துறை மீண்டும் கைது செய்தது. இதனால், அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், அவர் மீதான முதல் வழக்கில், தன்னை ஜாமீனில் வெளியே விட கோரி, சென்னை  ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த ஜாமீன் மனுவை அப்போது அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

முக்கியமாக, அவர் மீது கடந்த 23 ஆம் தேதி பதியப்பட்ட மற்றொரு வழக்கில், ஜெயக்குமாருக்கு வரும் மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இது, அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க கீழ் நீதிமன்றம் மறுத்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அதன் தொடர்ச்சியாக, சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது தொடர்பாக, “முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும்” மகேஷ் குமார் என்பவர் புகார் அளித்தார்.

இது குறித்தான வழக்கில், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், இந்த வழக்கில் மார்ச் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கானது, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், போலீசார் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. 

அதே நேரத்தில், “அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என்றும், புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. 

இவற்றை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11 ஆம் தேதியான இன்று தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தான், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், “அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி” நீதிபதி உத்தரவிட்டார். 

அத்துடன், “திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் திருச்சி கண்டோண்ட்மெண்ட் கையெழுத்திடவும்” நீதிபதி அதிரயடிகா உத்தரவிட்டார். 

மேலும், “திங்கள் கிழமை தோறும், சென்னை மத்திய குற்றப் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்றும், நீதிபதி கூறினார்.

இதனால், “அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தன் மீதான 3 வது வழக்கிலும் ஜாமீன் பெற்றதால்” அவர் விரைவில் சிறையிலிருந்து வெளிவர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.