“அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள், அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாடு 2 ஆம் நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் மாவட்டங்கள் தோறும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, முதலமைச்சர் அனைவரிடமும் கேட்டறிந்து வருகிறார்.

இந்த மாநாடு இறுதியில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். 

இதனையடுத்து, இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றப்படக் கூடிய திட்டங்கள் குறித்து, கள நிலவரத்தை விரிவாக நீங்கள் இங்கே எடுத்துரைக்கலாம்” என்று, குறிப்பிட்டார்.

“இந்த அரசினுடைய திட்டங்களின் பயன் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களில் அதை இணைத்து தெரிவிக்க வேண்டும் என்று, நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றும், அவர் கூறினார்.

“எங்களுக்கும், உங்களுக்கும் அதாவது, எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது” என்றும், முதல்வர் சுட்டிக்காட்டினார். 

“இதனை மனதில் வைத்து, ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும், அது தான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திட முடியும்” என்றும், அவர் முதல்வர் சுட்டிக்காட்டினார். 

“ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இருந்தால், நீங்கள் இங்கே கூறலாம் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கிறது என்றும், அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கலாம்” என்றும், முதல்வர் கூறினார்.

“அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசிற்கு வருமானத்தைப் பெருக்குவது என்பது குறித்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த கருத்துக்களை எல்லாம் நீங்கள் இங்கே தெரிவிக்கலாம்” என்றும், அதிகாரிகள் மத்தியில் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

“நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, உங்களுடைய ஆலோசனைகளை சுதந்திரமாக நீங்கள் கூறலாம் என்று கேட்டு, அந்த வகையில் உங்களுடைய கருத்துக்களைக் கேட்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்பதை மட்டும் இங்கே எடுத்துச் சொல்லி, என்னுடைய தொடக்க உரையை முடித்துக் கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.