மதத்தைக் காரணமாகக் கூறி பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த விசாரணைக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

zakir hussain

பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் டிசம்பர் பத்தாம் தேதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பெரும் சத்தமிட்டு, தன்னை கோவிலைவிட்டுத் துரத்தியதாக ஜாகிர் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர்களில் ஒருவரான ஜாகீர் உசேன், நடனத்திற்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கூட பல ஆண்டுகளாகப் பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாகத் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை ஆய்வு செய்து, ஸ்ரீரங்க நாயக்கம் என்ற நாட்டியத்தையும் அவர் அரங்கேறியுள்ளார்.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கராஜன் என்ற நபர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாகீர் உசேனை மிரட்டி வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும் பெருமாளை வணங்கச் சென்ற தன்னை ரங்கராஜன் என்ற நபர் கழுத்தைப் பிடித்து நெட்டி தள்ளியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜாகீர் உசேன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் பதிவில் நான் என் தாய்வீடாகக் கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன் என வருத்தத்துடன் பதிவிட்டுயிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல. இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன். காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை என நடன கலைஞர் ஜாகிர் ஹுசைன் பதிவிட்டுள்ளார்.

இதனால் இச்சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதத்தின் பெயரால் ஜாகீர் உசேனை அவமானப்படுத்திய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம் ஜாகீர் உசேனை வெளியேற்றிய அந்த நபர் கோயில் ஊழியர் இல்லை என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் யாரோ ஒரு நபர் கோயிலில் இப்படியொரு பிரச்சினையைச் செய்யும் போது அவரை ஏன் கோயில் நிர்வாகிகள் யாரும் தடுக்கவில்லை என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்,

மேலும் இதற்கிடையே இந்தச் சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜாகீர் உசேனுக்கு  திடீரென ரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஜாகிர் ஹுசைன் கூறியதாவது: மூன்று வயதிலிருந்து அந்தக் கோயிலுக்கு நான் சென்றுவருகிறேன். அதைப் போலவேதான் சம்பவம் நடந்த அன்று  பெருமாளை சேவிப்பதற்காகப் போனேன்.
நம்பிள்ளை உட்கார்ந்து ஏடு சொன்ன இடத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் என்னைப் பார்த்து சத்தமிட்ட ஆரம்பித்தார். அங்கிருந்து ஆரம்பித்து ரங்க ரங்கா மண்டபம் வரையில் "வெளியே போடா என்று சத்தம் போட்டார். இன்னொரு தடவை உள்ளே வந்தால் கொலை செய்துவிடுவேன் என்றார். அதனால் வேறு வழியில்லாமல் வெளியே வந்துவிட்டேன் என்று ஜாகிர் ஹுசைன்  தெரிவித்தார்.

இந்நிலையில். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல ரங்கராஜன் என்ற நபருக்கும் ஜாகீர் உசேனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பாக விசாரித்து வருவதாகக் கோயில் நிர்வாகமும் அறிவித்துள்ளது.