ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களுள் நிறையப் பொருட்கள் காணவில்லை என்றும், அவர் படுத்திருந்த கட்டிலையும் காணவில்லை” என்றும், தீபா புதிய குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, அதன் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் தமிழக அரசு சட்டப்பேரவையில் அப்போது பிறப்பித்தது. 

அதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லமானது அரசுடைமையாக்கப்பட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 67.95 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியது.

அத்துடன், “ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தங்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி உள்ளது என்றும், எனவே அது தொடர்பான நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்றும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்ட, திமுகவும் ஆட்சிக்கு வந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழுக்கிய நீதிமன்றம், “வேதா நிலையத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. அதன்படியே, வேதா இல்லத்தின் சாவி தீபக், தீபாவிடம் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள வேதா நிலையத்திற்குள் நுழைந்த தீபா, பல அதிரவைக்கும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உள்ளார்.

அதன்படி, “ஜெயலலிதா வாழ்ந்த அடையாளங்கள் என்று சொல்லுவதற்கு இந்த வீட்டிற்குள் எதுவும் இல்லை” என்று, பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக,  “ஜெயலலிதா படுத்துத் தூங்கிய கட்டிலையும் இங்கு காணவில்லை என்றும், ஜெயலலிதா பயன்படுத்திய பல பொருட்கள் இங்கு இல்லை” என்றும், தீபாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார். 

முக்கியமாக, “முன்பை விடவும் வேதா இல்லம் தற்போது மிகவும் மாறி இருக்கிறது என்றும், வீட்டிற்குள் நிறையப் பராமரிப்பு பணிகள் இருக்கிறது என்றும், அந்த பராமரிப்பு பணிகளை எல்லாம் முடித்துவிட்டுத் தான் இங்கு குடி வர வேண்டும்” என்றும், தீபா கூறியுள்ளார்.