கணவன் - மனைவி சண்டையில் உள்ளே புகுந்து விலக்கிவிட நினைத்த போலீசாரின் சட்டை, கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சென்னை அடுத்த திருவேற்காடு செல்லியம்மன் நகரை சேர்ந்த 28 வயதான தேவி என்ற பெண், தனது கணவர் கார்த்திக் உடன் வசித்து வருகிறார்.

ஆனால், கார்த்திக் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதைக வழக்கமாக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், நேற்று மாலை நேரத்தில் எப்போதும் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார் கார்த்திக்.

அப்போது, கடும் மது போதையில் இருந்த கார்த்திக், வீட்டில் இருந்த அவரது மனைவி தேவியிடம் சண்டைக்கு சென்று உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தேவி, கணவரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த கணவன் கார்த்திக், “என்னை என் மனைவி அடிப்பதாக நேற்று இரவு திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து, இந்த குடும்ப சண்டையை விசாரிப்பதற்காக, திருவேற்காடு போலீஸ் நிலைய தலைமை காவலரான 44 வயதான  தேவராஜ் என்பவர், தேவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது, அவர்களது வீட்டில் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த தேவியின் கணவன் கார்த்திக்கை, போலீஸ்காரர் தேவராஜ் மடக்கிப் பிடித்து விசாரித்து உள்ளார்.

அப்போது, கடும் மது போதையில் இருந்த கார்த்திக், போலீஸ்காரரான தேவராஜை தாக்கி அவருடன் மல்லுக்கட்டி உள்ளார். 

அத்துடன், அவர் போலீஸ்காரர் என்றும் பார்க்காமல், அவரது சட்டையை இழுத்து பிடித்து கிழித்தது மட்டுமல்லாமல், அந்த போலீஸ்காரரை கார்த்திக் கீழே தள்ளி விட்டு, கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனையடுத்து, மது போதையில் இருந்த கார்த்திக்கை, காவல் நிலையம் அழைத்து சென்ற சக போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கணவன் - மனைவி சண்டையில் உள்ளே புகுந்து விலக்கிவிட நினைத்த போலீசாரின் சட்டை, கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“சண்டையில கிழியாத சட்டையா?”