“விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அல்ல” என்று, நடிகை குஷ்பு விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 88,394 வாக்குச் சவாடிகளில் வாக்குப் பதிவு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இதனால், பொது மக்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். 

இப்படியாகத் தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந் தொற்று காரணமாக வாக்குச் சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

அதே நேரத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கொரோனா மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் பலரும், காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், காலையிலேயே நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வீட்டில் இருந்து சைக்கிளில் வருகை தந்தார். வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அவர் சைக்கிளில் வாக்களிக்க வருகை தந்தார் என்று கூறப்பட்டது.

அப்போது, நடிகர் விஜய் சைக்கிளில் வருவதைப் பார்த்த அவரது ரசிகர்கள், மகிழ்ச்சியில் துள்ளித் குதித்தனர். அத்துடன், அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பலரும் வந்தனர். பல ரசிகர்கள் விஜய் உடன் செல்பி எடுக்க முயன்றனர். ஆனாலும், ரசிகர்களை எப்படியும் சமாளித்துக்கொண்டு, தனது வாக்கினை நடிகர் விஜய் பதிவு செய்தார். இதனையடுத்து, அவரது ரசிகர்கள் அதிக அளவில் அங்கு கூடியதால், அவர் வந்த சைக்கிளில் திரும்பிச் திரும்பிச் செல்வது சற்று சிரமமாக இருந்தது. இதனால், வாக்கினை செலுத்திவிட்டுத் திரும்பிச் செல்லும்போது தனக்கு தெரிந்த ஒருவருடன் நடிகர் விஜய், ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார். அப்போதும், அவரது ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முயன்றனர்.

குறிப்பாக, நடிகர் விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியது. “ஒரு வேலை பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக அவர் சொல்லியிருக்கிறாரோ?” என்று, விஜய் ரசிகர்கள் இணையத்தில் பெரும் விவாதிக்கத் தொடங்கி நடத்தினர்.

இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார். 

இதனையடுத்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, “ஜனநாயகக் கடமையாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது” என்று, குறிப்பிட்டார். 

அத்துடன், “பொது மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

“திமுகவினர் எப்போதும் தேர்தல் விதிகளைப் பின்பற்றியது கிடையாது என்றும், காலை முதல் அதிக அளவிலான பெண்கள் வெளியில் வந்து வாக்களித்து உள்ளனர்” என்றும், அவர் கூறினார். 

மேலும், “நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது சாதாரண நிகழ்வு தான் என்றும், அவர் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிளில் வந்தாக சிலர் பொய் பரப்புரை செய்கின்றனர்” என்றும், குஷ்பு விளக்கம் அளித்தார். 

“வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது என்றும், வாக்களார்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கையுறை வழங்கிய பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்” என்றும், நடிகை குஷ்பு தெரிவித்தார்.

இதனிடையே, “பெட்ரோல் விலை உயர்வைக் குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்திருக்கலாம்” என்று, திமுக வேட்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.