தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று காலை முதலே முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் வாக்களித்து வருகிறார்கள். 


அந்த வகையில் அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, சூர்யா உள்ளிட்டோர் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித், மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க வந்தார். நீலாங்கரையில் உள்ள விஜய் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்தார்.


இந்நிலையில் இன்றைய சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் மாறியுள்ளனர். இதற்கு காரணம், நடிகர் அஜித் வாக்களிக்க வரும் போது கருப்பு நிறம் மாஸ்க் அணிந்திருந்தார். இதனால் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்கள் பேச தொடங்கினர்.


அடுத்தாக நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வருகை தந்து அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். ”பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்று சுட்டிக்காட்டும் வகையில் தனது வீட்டிலிருந்து  சைக்கிளில் சென்றார். இதனால் அவர் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றும் அவர் சைக்கிள் கருப்பு சிவப்பு நிறத்திலும், முக கவசமும் கருப்பு நிறத்தில் அணிந்து இருந்தார் எனவும், இதனால் நடிகர் விஜய்யும் திமுக-வுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். 


ஆனால் வாக்களிப்பது கட்டாயம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற கருத்தை மக்களிடம் வலியுறுத்தவே சைக்கிளில் வந்தார் என்று நடிகர் விஜய் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.