ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைத்துறையின் பல்வேறு பிரபலங்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவின் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களது வாக்கினை காலையிலேயே வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

அதன் படி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த், தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அதே போல், முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் சென்னை, ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு தங்கள் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசனுடன் சென்று தனது ஜனநாயகக் கடமையை செய்தனர். இதில், நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அதே போல், நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள சென்னை பெருநகர் தொடக்கப் பள்ளியில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் காலை 6.30 மணிக்கே வருகை தந்தார். அங்கு பொது மக்களுடன் அஜித் - ஷாலினி வரிசையில் நின்றனர். அப்போது, புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முற்பட்டனர். இதனால், அந்த பகுதியில் கூட்டம் கூடத் தொடங்கியது.

இதைத் தவிர்க்கும் வகையில் அங்கிருந்த காவல் துறையினர் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோரை 6.40 மணி அளவில் வாக்கு சாவடி மையத்திற்குள் உள்ளே அழைத்து வந்தனர். எனினும், அவருடன் சில ரசிகர்கள் உள்ளே நுழைந்து விட்டனர். தொடர்ச்சியாக, ரசிகர்கள் தொடர்ந்து செல்ஃபி எடுப்பதில் மும்முரம் காட்டினார். இதனைப் பார்த்த அஜித், முதலில் வெளியேறுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து ரசிகர் ஒருவர் செஃல்பி எடுத்துக் கொண்டே இருந்ததால், அவரின் செல்போனை வாங்கிக்கொண்ட அஜித், அதன் பிறகு அவரிடமே “இனி போட்டோ எடுக்கக்கூடாது” என்று எச்சரித்து அனுப்பினார்.

அதே போல், நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வீட்டில் இருந்து சைக்கிளில் வருகை தந்தார். வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அவர் சைக்கிளில் வாக்களிக்க வருகை தந்தார்.

விஜய் சைக்கிளில் வருவதைப் பார்த்த அவரது ரசிகர்கள், மகிழ்ச்சியில் உற்சாக குரல் துள்ளித் குதித்தனர். அத்துடன், அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தனர். பலரும், அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். 

ஆனாலும், ரசிகர்களை எப்படியும் சமாளித்துக்கொண்டு, தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து, அவரது ரசிகர்கள் அதிக அளவில் கூடியதால், அவர் வாக்கினை செலுத்திவிட்டுத் திரும்பிச் செல்லும்போது தனக்கு தெரிந்த ஒருவருடன் அவர் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்.

குறிப்பாக, நடிகர் விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியது. “ஒரு வேலை பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக அவர் சொல்லியிருக்கிறாரோ?” என்று, விஜய் ரசிகர்கள் இணையத்தில் பெரும் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர்.

அதே போல், தியாகராயநகர் வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

சென்னை வளசரவாக்கம் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

குடும்பத்தினருடன் வருகை தந்து வாக்களித்தார் நடிகர் அருண்விஜய்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ மற்றும் நடிகை நமீதா சற்று முன்பாக வாக்களித்தனர். இது போன்று, தமிழக திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.