தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ் திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்களித்து வருகிறார்கள். காலை 7 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கோடை வெயில் கொளுத்துவதால் வெயிலுக்கு முன்பாக காலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அரசியல் தலைவர்களும் திரைத்துறை பிரபலங்களும் காலையிலேயே தங்களின் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவக்குமார், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களுக்கான வாக்குச்சாவடிகளில் முகக்கவசம் அணிந்து காலையிலேயே வாக்களித்தனர். இந்நிலையில் சியான் விக்ரம் தனது வாக்கினை பெசண்ட் நகரில் பதிவு செய்தார். வாக்குச் சாவடிக்கு வந்த சியான், ரெமோ கெட்டப்பில் இருந்ததை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை, வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

சியான் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த டீஸரை கொண்டாடினர் சியான் ரசிகர்கள். இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த உள்ளனர் படக்குழுவினர். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் மார்ச் 10-ம் தேதி முதல் சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. செவன் ஸ்க்ரீன் சார்பாக லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படமும் சியான் கைவசம் உள்ளது.