தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்காளார்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார். ரஜினி தனது மனைவியுடன் வராமல் தனி ஆளாக வந்து வாக்களித்தார். முன்னதாக, ஜனவரியில் கட்சி தொடங்குவது உறுதி என்றும், அதற்கான தேதியை டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த ரஜினிகாந்த், தன்னுடைய உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்து அறிவித்தார். 

இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி ஆளாக அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாக்கு செலுத்தும் நேரத்தில், அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால், அவர்களை தள்ளிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார் ரஜினிகாந்த். 

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். 

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. 

அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.