“தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை” என்று, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

இப்படியான சூழ்நிலையில் தான், நாட்டில் முதன் முறையாக அன்றாட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது, ஒரு லட்சத்தைத் தாண்டி 
உள்ளது. 

மிக முக்கியமாக, உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது முதலிடத்திற்கு வந்துள்ளது. இப்படியான இக்காட்டான சூழ்நிலையில் தான், தமிழகத்தில் நாளைய தினம் 
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

இந்நிலையில், “வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்” குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து உள்ளார். 

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது” என்று, குறிப்பிட்டார். 

“இதனால், வாக்களிக்கச் செல்லும் போது பொது மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

“வாக்குச் சாவடிகளில் தனி மனித இடைவெளியைக் கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு உள்ளன” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும்” கூறினார். 

குறிப்பாக, “வாக்குப் பதிவின் போது, கடைசி ஒரு மணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், “தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருக்கிறதா என்று நடத்தப்படும் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், 7 ஆம் தேதிக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதனை நடத்தப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், “கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொள்ளப்படும் என்றும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், போதுமான தடுப்பூசி ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.

அதே போல், “மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது உள்ள கொரோனா பாதிப்பு போல், தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். 

முக்கியமாக, “தேர்தலுக்குப் பிறகு முழு பொது முடக்கம் வரும் என்ற செய்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்றும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.