தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். தமிழ் திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்களித்து வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார். நடிகர் ரஜினி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இன்று திருவான்மியூரில் முதல் ஆளாக வந்து நடிகர் அஜித் வாக்களித்தார். இவருடன் ஷாலினியும் வாக்களித்தார். ரசிகர்களையும், கூட்டத்தையும் தவிர்ப்பதற்காக அஜித் அதிகாலையிலேயே வந்து வாக்களித்து விட்டு சென்றார். ஆனாலும் அஜித் வந்ததை பார்த்து அங்கு இருந்த ரசிகர்கள் கூட்டமாக கூடினார்கள்.

இவர்களை தவிர்த்துவிட்டு அங்கிருந்து எப்படியாவது கிளம்பி செல்லலாம் என்று தல அஜித் முயன்றார். ஆனால் வாக்குசாவடி மையத்திற்கு உள்ளே செல்லும் முன் அஜித்தை சுற்றி அவரின் ரசிகர்கள் பலர் நின்றனர். அஜித்தை நெறுக்கிக்கொண்டு பலர் அவரின் அருகிலேயே நின்றனர். போலீஸ் இருந்தும் கூட இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. 

அப்போது அஜித் அருகே இருந்த ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்ததும் கோபம் அடைந்த அஜித், அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார். அதன்பின் கோபமாக இருந்த அஜித் அருகில் இருந்த ரசிகர்களை கிளம்பி செல்லும்படி கூறினார். அஜித் பொது இடங்களில் இப்படி கோபமாக நடந்து கொண்டது இல்லை. இன்று அவர் நடந்து கொண்ட விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் என்றாலும், அவரும் மனிதர் தானே என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.