கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று மற்றும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிப்புக்குள்ளாவதின் எதிரொலியாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 9ஆம் தேதி அன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவலின் 2வது அலையில் பல லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். திரையுலகைச் சார்ந்த பல முன்னணி பிரபலங்களும் மூத்த கலைஞர்களும் வைரஸ் தொற்றுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தமிழ் திரை உலகில், ஆக்சன் கிங் அர்ஜுன், உலக நாயகன் கமல்ஹாசன், வைகைப் புயல் வடிவேலு உள்ளிட்ட பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில், இன்று (ஜனவரி 5 ஆம் தேதி) நடிகர் அருண் விஜய் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்தார்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழும் நடிகை மீனாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வர கலாட்டா குடும்பம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.